search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 5 டன் பூக்களால் அபிஷேகம்
    X

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்கள் மலை போல் குவிந்துள்ளதை படத்தில் காணலாம்.

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 5 டன் பூக்களால் அபிஷேகம்

    • புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.

    இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. இதனால் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை.

    அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா ஆடி 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று நடந்தது. இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து அம்மன் உருவப்படங்களுடன் கூடிய ரதங்கள் புறப்பட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தன. அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அனைத்து ரதங்களும் புறப்பட்டன.

    பக்தர்கள் ஏராளமானோர் பூக்கூடைகளை கொடுத்தனர். இந்த பூக்கூடைகள் அனைத்தும் ரதத்தில் வாங்கி வைக்கப்பட்டன. பின்பு மேளதாளங்கள் முழங்க இந்த ரதங்கள் தஞ்சையில் உள்ள முக்கியவீதிகள் வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை மாரியம்மன்கோவில் தேரோடும் முக்கிய வீதிகளில் அம்மன் ரதங்கள் வலம் வந்தன.

    ரதத்தின் முன்பு பெண்கள், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது. பின்பு புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-க்கும் மேற்பட்ட வகையான சுமார் 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×