search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனியில் இன்று நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
    X

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    பழனியில் இன்று நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

    • பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்கியது.
    • அக்டோபர் 4-ந்தேதி வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதற்காக கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு முருகபெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிகால பூஜையில் காப்பு கட்டப்பட்டது.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்கியது. 10 நாட்களும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும். மேலும் கோவில் வளாகத்திலும் கொலு வைக்கப்பட்டுள்ளது.

    இதனுடன் பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான அக்டோபர் 4-ந்தேதி அன்று முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி தங்க குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×