search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கிருஷ்ணர் நடத்திய லீலைகள்...
    X

    கிருஷ்ணர் நடத்திய லீலைகள்...

    • கிருஷ்ண பகவான் பல்வேறு லீலைகளை நடத்தியுள்ளார்.
    • கிருஷ்ணர் நடத்திய லீலைகள் இதோ...

    கண்ணனுக்கு ஆடை கொடுத்த திரவுபதி

    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். "கண்ணா, சீக்கிரம் வா!" என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் பொய்விட்டான். பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, "கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!" என நின்று யோசித்தாள். "அவன் கட்டியிருந்த உடை நீச் சலடிக்கும் பொது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்" என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

    உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான். இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபொது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    உதவியவர்களை மறக்காதீர்

    நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி. யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.

    கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, 'கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு, கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான். அவன் கண்ணனிடம், 'கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன்' எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான்.

    கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான். ததிபாண்டன் அப்போதும் 'கண்ணா! நான் மோட்சம் பெறகாரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு!' என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.

    நண்பனுக்கு சேவை

    எல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர். இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர்.

    ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார் எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன். குசேலரின் திருவடியை வணங்கினான். 'கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா?' எனக்கேட்டு, 'உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே!' என்று சொல்லி அவற்றை வருடினான் கண்ணணின் அன்பைக் கண்ட குசேலர் மெய்மறந்து போனார்.

    இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.

    பாமா ருக்மணி போட்டி

    பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள். ஆனால் அதன் உச்ச கட்டம் ருக்மணியின் பெருமையை விளக்குவதாகவே அமையும்.

    அப்படி நடந்த நிகழ்ச்சிகளில் பாரிஜாத மலரால் ஏற்பட்ட விவகாரமும் ஒன்றாகும். ஒருமுறை கண்ணன் நரகாசுரனை வென்ற பின் இந்திரலோகத்திற்கு சத்யபாமாவுடன் செல்ல இந்திரன் அவருக்குக் காணிக்கையாக பாரிஜாத மலர் மாலையை அணிவித்தான். ஆனால் சத்யபாமாவைப் பொருட்படுத்தவில்லை.

    அங்கிருந்து வந்த கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான். நாரதர் அதைக் கண்டதும் கலகத்திற்கு ஒரு காரணம் கிடைத்ததென்று பாமாவிடம் வந்து, "நரகாசுரவதம் நடப்பதற்காக நீதானே கண்ணனுக்கு சாரதியாகச் சென்றாய். அதற்குப் பரிசாகத்தானே கண்ணனுக்கு இந்திரன் எப்போதும் வாடாத பாரிஜாத மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்தான். நியாயமாக அதைக் கண்ணன் உனக்குத்தானே அணிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை அப்படியே கொண்டு வந்து ருக்மணியிடம் தந்து விட்டானே. இது நியாயமா? என்று கேட்டார். ஏற்கனவே இந்திரன் தன்னை சரியாக கவுரவிக்கவில்லை என்று கொதித்துக் கொண்டிருந்த பாமாவிற்கு மேலும் கோபம் பொங்கியது.

    கண்ணன் வந்தபோது அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். காரணம் கேட்டபோது இந்திரனின் பாரிஜாத மரம் இங்கு வர வேண்டும். அப்போதுதான் பேசுவேன் என்றாள். கண்ணன் அந்த மரத்தை சில நாட்கள் தங்களிடம் இருக்க தந்தனுப்ப வேணடும் என்று இந்திரனுக்கு செய்தி அனுப்ப, அவன் முடியாது என்று மறுத்து விட்டான். அதனால் கண்ணன் இந்திரன் மீது போர் தொடுத்து வென்று அந்த பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து பாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் பதித்து வைத்தார்.ஆனால் அந்த மரம் அங்கேயிருந்தாலும் அந்த மலர்கள் ஒவ்வொரு நாளும் ருக்குமணியின் அரண்மனையில் போய் விழுந்தன என்பது வேறு கதை.

    சகாதேவன் பக்தி

    பாண்டவர் ஐவருள் யார் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் உள்ளத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள். ஆனால் அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாகயிருந்தவன். பூபாரம் தீர்க்க வந்த பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண் டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்களில்லை. குருசேத்திரப் போரில் அவர் அனைவரையும் அழித்திருப்பார். அதில் பாண்டவரும் மாண்டிருப்பர். அந்த ரகசியத்தை அறிந்தவன் சகாதேவன்.

    பரமாத்மா தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்லப் புறப்படுகிறார். அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டை யா, சமாதானமா என்று கேட்கிறார்.

    தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர். ஆனால் சகாதேவன் மட்டும் "எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப் போகிறது. அதைச் செய்யுங்கள்" என்கிறான். சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் இவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறான் என்பதை உணர்கிறார் கிருஷ்ணர்.

    சகாதேவனைத் தனிமையில் சந்தித்த பரமாத்மா "பாரதப் போர் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்" என்று கேட்கிறார். "உங்களைக் கட்டிப் போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும்" என்கிறான் சகாதேவன். "எங்கே என்னைக் கட்டு பார்க்கலாம்!" என்ற கண்ணன் மறுகணம் பதினாறாயிரம் வடிவம் கொண்டு நிற்கிறார். ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனத்தால் உண்மை வடிவத்தைக் கட்டுகிறான்.

    அதற்கு மகிழ்ந்து கண்ணன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சகாதேவன் ஐவர் உயிரையும் காத்தருள வேண்டும் என்று கேட்க அவ்விதமே அருள்புரிகிறார் கண்ணன். "பசையற்ற உடல்வற்ற" என்ற இந்தப் பாடலில் பாண்டவர் மீது குற்றமற்ற, முடிவில்லாமல் வளர்ந்த பற்று வைத்திருந்த கண்ணன், சகாதேவனுக்கு அளவற்ற தனது வடிவங்களைக் காட்டினார்.

    கிருஷ்ணர் உபதேசங்கள்

    ஸ்ரீகிருஷ்ணர், வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.  உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு. அவமானத்தைத் தாங்கிக் கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாக கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய். எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு. எனக்காகவே எல்லாக் கர்மங்களையும் செய். பற்றுகளில் இருந்து விலகி விடு. தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு.

    உரலில் கட்டுண்டது

    குழந்தை கிருஷ்ணன் வளர வளர அவனுடைய விஷமங்களும் வளர்ந்து வந்தன. பாத்திரங்களில் உள்ள தயிர், பால் முதலியவற்றைக் கவிழ்த்து விடுவான். அவனுக்கு வெண்யிணையில் பிரியம் அதிகம். தயிர் பானையில் கையைவிட்டு அளைவான். மேலெல்லாம் பூசிக்கொள்வான். அவனுக்கு வெண்ணையை கொடுத்து மகிழ்வார்கள். அவனும் விருப்பமாய் வாங்கி உண்பான். கண்ணனுடைய வருகைக்குப் பின்னர் கோகுலத்தில் பால்வளம் பெருகிற்று.

    ஒரு நாள் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்து சேர்ந்த கிருஷ்ணன் தயிர்ப் பானையில் கையை விட்டு வெண்ணையை வாரினான். தயிர் கடைய ஒட்டாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். யசோதைக்குப் பெரும் கோபம் வந்தது. ஒரு கயிற்றை எடுத்து குழந்தையின் இடுப்பில் கட்டினாள். கயிற்றின் மறு முனையை ஓர் உரலுடன் சேர்த்துக் கட்டினாள்.

    யசோதை உள்ளே சென்றதும் குழந்தை உரலை இழுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் போனான். குபேரனுடைய மக்களாகிய நளகூபரனும் மணிக்கிரீவனும் நாரதர் சாபத்தால் மருதமரமாகி, தோட்டத்தில் இருந்தனர். பகவானுடைய அனுக்கிரகத்தால் அவர்கள் பழைய உருவைப் பெறுவார்கள் என்று முனிவர் சாப விமோசனமும் அளித்திருந்தார். அந்த நாளை எதிர்நோக்கியிருந்தார்கள் அவர்கள்.

    குழந்தை மெதுவாக அந்த மருத மரங்களை நோக்கிச் சென்றான். அவற்றின் இடையே நுழைந்து அப்பால் சென்றபோது உரல் மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. கிருஷ்ணன் முயன்று இழுத்த போது மரங்கள் இரண்டும் வேரோடு சாய்ந்து போயின. சாபம் நீங்கபெற்ற நளகூபரனும் மணிக்கிரீவனும் தேஜோ மயமாய் வெளிப்பட்டனர். பகவானைப் பணிந்து விடைபெற்று வாண்வெளியில் மறைந்தனர்.

    கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை

    கண்ணன் செய்த லீலைகள் கணக்கில் அடங்காது. வெண்ணெய் உண்டது, தயிரைத் திருடியது, பூதனையைக் கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, கம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார். இதனை கண்ணன் பாட்டில், ''தீராத விளையாட்டுப் பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!'' என்று பாரதியார் நகைச்சுவை உணர்வோடு பாடியிருக்கிறார். ஆழ்வார்கள், பாகவதர்கள் கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபட்டு அனுபவித்துப் பாடியுள்ளார். வேதமும் இறைவனை, ''ரஹோவைசா'' என்று வர்ணிக்கிறது. 'பகவானை விட சிறந்த ரசனை உள்ளவன் வேறில்லை' என்பது இதன் பொருள்.

    கிருஷ்ணர் செய்த பித்ரு பூஜை

    கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் புகழ் பெற்ற வைணவத் தலம் ஒன்று உள்ளது. 108 திவ்ய தேசங்களில் அந்த தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்ெபருமானுக்கு ''நாவாய் முகுந்தன்'' என்று பெயர். இந்த தலம் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். கோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைத்து பித்ரு கடமைகள் செய்ய வசதி செய்துள்ளனர். எனவே ஏதாவது ஒரு அமாவாசை தினத்தன்று திருநாவாய் சென்று கிருஷ்ண பரமாத்மா செய்தது போல பித்ரு பூஜைகள் செய்து பலன் பெறலாம்.

    Next Story
    ×