search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அபுதாபியில், இந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரம்
    X

    அபுதாபியில், இந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரம்

    • கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    அபுதாபி:

    அபுதாபியில், இந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது.

    அமீரகத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வருகை புரிந்தார். அப்போது மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

    இதற்கான உத்தரவை அப்போதைய அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். இந்த கோவிலின் கட்டுமான பணிகளை நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற இந்து அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து பாப்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அரசின் இந்த அனுமதியை தொடர்ந்து கோவிலின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்படுகிறது. இந்து கோவிலின் கட்டுமான பணிகளில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என அமீரகத்தில் வசிக்கும் இந்திய மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் கற்களை கட்டுமான தளத்திற்கு எடுத்து செல்கின்றனர்.

    இரும்பு கம்பிகள் எதுவும் இல்லாமல் பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் ௭ கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்று முதல் தளத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

    கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்படுகிறது. பூக்கள் மற்றும் கொடிகள் போன்ற வேலைபாடுகளுடன் இந்த சிற்ப கற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகள் வைப்பதற்கு தேவையான இடைவெளி விட்டு கட்டப்படுகிறது.

    இதில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்த சம்பவங்களை விளக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை அந்த கோவில் வளாகம் முழுவதும் பதிக்கப்பட உள்ளன. இந்த கோவிலின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 1,000 ஆண்டுகளாக இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதற்காக கட்டுமான பகுதியில் மேற்கு ராஜஸ்தானில் இருந்து 70 சிற்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.

    இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்படுகிறது. கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×