search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆனித்தேரோட்டம் கோலாகலம்: மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் நெல்லையப்பர் தேர்
    X

    தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்த காட்சி.

    ஆனித்தேரோட்டம் கோலாகலம்: மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் நெல்லையப்பர் தேர்

    • 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார்.
    • விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும்.

    நெல்லையப்பர் கோவில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை-மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இன்று காலை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக இன்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேரோட்டம் தொடங்கியது. பின்னர் 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார். அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சந்திரசேகர், கிட்டு, உலகநாதன், 25-வது வார்டு வட்ட செயலாளர் டவுன் பாஸ்கர், சுற்றுச்சூழல் அணி அமிதாப், நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தற்காலிக கழிப்பிடங்கள், மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடங்கள், வாகன நிறுத்தங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையா் கவிதா பிரியதர்ஷினி, கோவில் செயல் அலுவலா் அய்யர் சிவமணி மற்றும் நிா்வாக அதிகாாிகள் செய்திருந்தனா்.

    தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாகம் தீர்க்கவும், பசியாற்றவும் தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர். பாராயணங்களும் பாடினர். சிறுவர்கள் கூட்டமாக கூடி இசை வாத்தியங்கள் வாசித்தனர்.

    சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது. திருவாரூர் ஆழித்தேர் உயரத்தில் அதிகம் என்றாலும் முழுக்க முழுக்க மூங்கில் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ஹிட்டாச்சி எந்திரங்களும், ஹைட்ராலிக் பிரேக் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டு இழுக்கப்படுகிறது. உயரத்தில் 2-வது பெரிய தேரான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தேர் மூங்கில் பிரம்புகள் மற்றும் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ராட்சச எந்திரங்கள் மூலம் இழுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லையப்பர் தேர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் மட்டுமே இழுக்கப்படுகிறது. தேர் இழுக்க 300 அடி நீளத்தில் 4 வடம் பயன்படுத்தப்படுவதுடன், தேர் திரும்பவும், தேரை நிறுத்தவும் சறுக்கு கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    Next Story
    ×