search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வீட்டில் வழிபாடு
    X
    வீட்டில் வழிபாடு

    வெற்றி தரும் அட்சய திருதியை

    இந்த ஆண்டு அட்சய திருதியை தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று நாம் எந்த செயலைத் தொடங்கினாலும் அது குறைவே இல்லாமல் பெருகும் என்பது ஐதீகம்.
    கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் யார் ஒருவருக்கு முழுமையாக கிடைக்கிறதோ, அவர்களது வாழ்க்கையும் நிறைவானதாக இருக்கும். இந்த மூன்றில் எந்த ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை பூரணத்துவம் பெறாது.

    செல்வம் இருந்து கல்வியும் வீரமும் இல்லாவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. சிலரிடம் கல்வி இருக்கும். ஆனால் செல்வமும், துணிச்சலான வீரமும் இல்லாமல் தவிப்பார்கள். எனவே கல்வி, செல்வம், வீரம் மூன்றும் வேண்டும்.

    இந்த மூன்றையும் பெற்றுத் தரும் அரிய திருநாளாக அட்சய திருதியை தினம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாவது நாள் அட்சய திருதியை தினமாகும்.

    அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று நாம் எந்த செயலைத் தொடங்கினாலும் அது குறைவே இல்லாமல் பெருகும் என்பது ஐதீகம்.

    அதனால்தான் நிறைய பேர் அட்சய திருதியை தினத்தன்று புதிய பொருட்களையும், தங்கத்தையும் போட்டி போட்டு வாங்குவார்கள். இன்று எது வாங்கினாலும அது இரட்டிப்பு பலன்களைத் தரும் என்பதால்தான் மக்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை வாங்குவார்கள்.

    ஆனால் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. இன்றுய தினம் நாம் எந்த செயல் செய்தாலும் அது உங்களுக்கே இரட்டிப்பாக திரும்பி வந்து விடும். நீங்கள் ஒருவரை இன்று வஞ்சனை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வஞ்சனை உங்களுக்கு 2 மடங்காக திரும்பி வந்து விடும்.

    அதே சமயத்தில் இன்று நீங்கள் தானம் செய்து பாருங்கள். அந்த தான பலன் உங்கள் மனதை குளிர்விக்கும் வகையில் இரண்டு மடங்காக உங்களுக்கே புண்ணியமாக திரும்பி வந்து விடும். புண்ணியம் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். புண்ணியத்தை தேடிக் கொள்ள இன்று அருமையான நாளாகும்.

    “நானே மாதச் சம்பளம் வாங்கி விட்டு, மாதக் கடைசியில் அல்லாடிக்கிட்டு இருக்கிறேன். இதுல எதை தானம் செய்வது?” என்று பலர் நினைக்கக் கூடும். தானம் செய்வதற்கு பணக்காரராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நல்ல மனசு இருந்தால் போதும்.

    தாகத்தில் தவித்து, நா வறண்டு, யாராவது ஒரு தம்ளர் தண்ணீர் தர மாட்டார்களா என்ற நிலையில் இருக்கும் ஒரு ஏழைக்கு 10 ரூபாய் கொடுத்து ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொடுப்பது கூட தானம்தான். கொஞ்சம் வசதி இருந்தால் ஒரு ஏழைக்கு குடை வாங்கி கொடுக்கலாம். வெயில் வாட்டி வதைக்கும் தற்போதைய நிலையில் ஏழை எளியவர்களுக்கு செருப்பு வாங்கிக் கொடுக்கலாம்.

    இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதி இருப்பவர்கள் இன்றுய தினம் 5 ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் கொடுக்கலாம். ஒரு வேளையாவது அவர்கள் வயிறார சாப்பிட்டு விட்டு உங்களை வாழ்த்தினால், அது அட்சயமாக பெருகி உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் பிள்ளை, குட்டிகளுக்கும் புண்ணியத்தைத் தேடி கொடுக்கும்.

    எனவே இன்று அட்சய திருதியை தினத்தன்று புதிய பொருட்கள் வாங்குவதற்கு எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறீர்களோ... அதே அளவு ஆர்வத்தை தானம் செய்வதற்கும் காட்டுங்கள்.

    அட்சய திருதியை தினத்தன்று செய்யும் தானம் உங்கள் குடும்பத்தை செழிக்க வைக்கும். அந்த செழிப்பே நாளடைவில் உங்களுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் பெற்றுத் தருவதாக மாறும். இன்று தானம் செய்யும் முன்பு மகாலட்சுமியையும், குபேரனையும் மனம் உருகி வழிபடுங்கள். “நீங்கள் எனக்கு தந்த செல்வத்தை ஏழைகள் மனம் மகிழும் வகையில் நான் செலவிடுகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்” என்று மகாலட்சுமியிடமும் குபேரனிடமும் மனதார சொல்லுங்கள்.

    உங்கள் பிரார்த்தனையை ஏற்று மகாலட்சுமியும் குபேரனும் மகிழ்ச்சி அடைந்து உங்கள் மீது அருள் மழை பொழிவார்கள். செல்வத்துக்கு அதிபதிகளான லட்சுமி, குபேரன் இருவரது பார்வையும் ஒருங்கே உங்களுக்கு கிடைத்தால் பிறகு கேட்கவா வேண்டும்.

    உங்கள் வாழ்வு வளமாகும். அமைதி பெறும். அது மட்டுமின்றி ஆனந்தமாக வாழ்வீர்கள். இன்று நீங்கள் செய்யும் தான-தர்மங்களை பொருத்தே இந்த செல்வங்கள் எல்லாம் குன்றாத அருவியாக உங்களுக்கு வெள்ளமாக வரும். எனவே இன்று தானம் செய்யுங்கள். தரணி போற்றும் புண்ணியத்தைப் பெறுங்கள்.
    Next Story
    ×