
காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனிடையே தேருக்குப் பின் பக்கம் சன்ன கட்டை போடுவதில் இரு கிராமத்திற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தேரை இழுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை செய்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேரை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிலைக்கு வந்தடைய உதவ வேண்டும், சீருடை அணிந்தவர்கள் மட்டும் அங்கே இருக்கும் படியும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மது அருந்தியவர்கள் அங்கே நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவரது சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதை அறிந்த கிராம பட்டயதாரர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் துணை சூப்பிரண்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து திருவிழா அமைதியாக நடப்பதற்கும், தேர் நிலையை அடையவும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று மீண்டும் போலீசார் அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தேர் ரதவீதிகளில் இழுத்து வரப்பட்டு நிலையை அடைந்தது.