
தீர்த்த உற்சவத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, விநாயகர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு உச்சிகால சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து மதியம் 1 மணியளவில் மேளதாளங்கள் முழங்க தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையும், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும், பல்லக்கில் அஸ்தரதேவர் எழுந்தருளி சரவணப்பொய்கைக்கு சென்றனர்.
இதனையடுத்து சரவணப் பொய்கை புனித நீரில் அஸ்திரதேவருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சரவண பொய்கை வளாகத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலாவந்து உற்சவர் சன்னதிக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவிழாவின் நிறைவாக கொடியிறக்கப்பட்டது.