
ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள்பாலிக்கிறார். நேற்று பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி நேற்று முன்தினம் இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் தீபாராதனையும் நடந்தது.
இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கேது பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவது வழக்கம்.
அதன்படி நேற்று கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதைத்தொடர்ந்து கேது பரிகார ஹோமம் நடந்தது.
பின்னர் கேது பகவானுக்கு வாசனை திரவியங்கள், மஞ்சள் பொடி, இளநீர், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து பிற்பகல் 3.14 மணிக்கு கேது பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த ராகு, கேது பெயர்ச்சி விழாக்களில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.