
அப்போது மாட வீதிகளில் திரண்டு இருந்த திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனா். ஊர்வலத்துக்கு முன்னால் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தங்கக்கொடி மரம் எதிரில் 5 திசைகளில் அமர்த்தப்பட்டனர். மதியம் ஒரு மணியளவில் வேத பண்டிதர்கள் ஆகம முறைப்படி கலசங்களை வைத்தும், சிறப்பு யாகம் வளர்த்தும் சிறப்பு பூஜைகளை செய்தனா். பூஜைகள் முடிந்ததும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க, பக்தர்கள் ஹர ஹர மகாதேவா.. சம்போ சங்கரா.. எனப் பக்தி கோஷம் எழுப்ப, பிரதான அர்ச்சகர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் பிரம்மோற்சவ விழா கொடியை தங்கக்கொடி மரத்தில் ஏற்றினார்.
அத்துடன் பிரம்மோற்சவ விழா கொடியுடன் பெண் பக்தர்கள் கொடுத்த சேலைகளும் கொடிமரத்தில் ஏற்றப்பட்டன. அதன் பிறகு தங்கக்கொடி மரத்துக்கு சிறப்புப்பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடந்தது.
கொடியேற்றத்துக்கு பூஜை செய்வதற்கான மங்கல பொருட்களை உபயதாரர்கள், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர், ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. குடும்பத்தினர் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பித்தனர். அதில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் வெள்ளி அம்பாரிகளில் சிவன், அம்பாள் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.