search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுவாமி- அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய காட்சி.
    X
    சுவாமி- அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய காட்சி.

    ராமேசுவரம் கோவிலில் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி, அம்பாள்

    மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் சுவாமி- அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் கோவில் நடை மூடப்பட்டது.
    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 5.39 மணி அளவில் சாமி-அம்பாள் கோவிலில் இருந்து தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ரதவீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைதொடர்ந்து காலை 8 மணிக்கு சாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கோவிலிலிருந்து எழுந்தருளி ரதவீதி சாலை, நடுத்தெரு, திட்டக்குடி சவுந்தரி அம்மன் கோவில் தெரு வழியாக கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.

    இதைதொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு சாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தனர். பின்னர் பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடையானது உடனடியாக மூடப்பட்டது.

    சுவாமி, அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் நேற்று காலை 8 மணி முதல் இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், தரிசனம் செய்யும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல் திருவிழாவின் 4-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-வது நாள் திருநாளான மார்ச் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
    Next Story
    ×