என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில்
    X
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடங்குகிறது

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 24-ந் தேதி மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. மாடவீதிகளில் வீதி உலா நடத்த அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி வழக்கம் போல் நடத்துவதற்கு மாநில அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது.

    கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில் நான்கு மாடவீதிகளில் சாமி வீதிஉலா நடக்குமா? என கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் உற்சவ மூர்த்திகளை 4 மாட வீதிகளில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களுக்கும் வர்ணங்கள் பூசுவது, தேர் திருவிழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயாரின் தேர்களை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியன்று பக்தர்கள் எந்த வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்திட கோவிலுக்குள் கூடுதல் வசதிகளை செய்து வருகின்றனர்.

    வருகிற 28-ந் தேதி அரசு சார்பில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் அருகில் உள்ள கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×