search icon
என் மலர்tooltip icon

  வழிபாடு

  பீஷ்மாஷ்டமி
  X
  பீஷ்மாஷ்டமி

  பீஷ்மரின் ஆசியை பெற்றுத் தரும் ‘பீஷ்மாஷ்டமி’

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும் ஒருசேரப் பெறலாம்.
  9-2-2022 பீஷ்மாஷ்டமி

  மகாபாரத இதிகாசக் கதையின் ஆணி வேராக இருப்பவர், பீஷ்மர். இவர் தன் தந்தைக்காக தன்னுடைய இல்லற வாழ்வையே துறந்தவர். இதனால் அவரது தந்தை சந்தனுவிடம் இருந்து, ‘நீ விரும்பும் நேரத்தில்தான் உன்னுடைய மரணம் நிகழும்’ என்ற வரத்தை பெற்றிருந்தார். இதையடுத்து அவர் அஷ்தினாபுரத்தின் அரசாட்சியை நிலை நிறுத்துவதிலும், தன் சகோதரர் களின் பிள்ளைகளை சிறப்பானவர்களாக உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.

  பின்னாளில் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, குருசேத்திரப் போருக்கு வழிவகுத்தது. ஆனால் அந்தப் போரில் நியாயத்தின் பக்கம் நிற்காமல், தன்னுடைய அரசாட்சியை தலைமையேற்று நடத்தும் கவுரவர்களுக்கு ஆதரவாகவே நின்றார் பீஷ்மர். 18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில், 10-ம் நாள் அம்புகள் துளைக்க போர்க்களத்தில் வீழ்ந்தார் பீஷ்மர். அவரது உடலில் துளைத்திருந்த அம்புகள், அவரது உடலை தரையில் விழாதபடி, படுக்கையாக நின்று தாங்கிப்பிடித்திருந்தன.

  ஆனால் அவரது உயிர் பிரியவில்லை. ஏனெனில் தை மாதத்தில் வரும், உத்தராயன புண்ணிய காலத்தில் தான் மரணிக்க வேண்டும் என்று பீஷ்மர் காத்திருந்தார். மரணப் படுக்கையில் இருக்கும்போது, அவர் கூறிய அறிவுரைகள் ஏராளம். அவர் இறைவனை ஆயிரம் நாமங்களால் பாடியது, ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உத்தராயன புண்ணிய காலம்தொடங்கியும், பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அவர் வேதனையில் தவித்து வந்தார்.

  அப்போது போர்க்களத்திற்கு வந்த வியாசரிடம், “நான் விரும்பியும் கூட என் உயிர் பிரியாததற்கு என்ன காரணம்?. நான் செய்த பாவம் என்ன?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வியாசர், “ஒரு காாியத்தைச் செய்வதால் ஏற்படும் தவறான வினையின் காரணமாக நிகழ்வது மட்டுமே பாவம் அல்ல. நம்மால் முடியும் என்றாலும், எதுவும் செய்யாமல் நிற்பதன் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதுவும் பாவத்தில்தான் சேரும். உனக்கு அதிகாரம் இருந்தும், ஆற்றல் இருந்தும் திரவுபதிக்கு சபையில் நடந்த அநீதியை தடுக்காமல் நின்ற பாவம்தான், உன்னை மரணிக்க விடாமல் தடுத்து நிற்கிறது” என்றார்.

  பின்னர் அதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரே கூறினார். “திரவுபதிக்கு சபையில் நடந்த அநீதியை நினைத்து நீ பலமுறை வருந்தியிருக்கிறாய். ஒருவர், தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து விட்டாலே, அந்தப் பாவம் அகன்று விடுவதாக வேதம் சொல்கிறது. அந்த வகையில் உன் பாவம் நீங்கிவிட்டது. என்றாலும் திரவுபதி, தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் திறக்காத உன் வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்.

  பீஷ்மா.. உன்னுடைய இந்த பாவங்களை எல்லாம் பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே இருக்கிறது. சூரியனுக்கு உகந்த எருக்கம் இலைகளைக் கொண்டு உன்னுடைய அங்கங்களை அலங்கரித்தால், அது உன்னுடைய வேதனையை குறைத்து, உன்னை புனிதப்படுத்தும்” என்றவர், அதன்படியே செய்தார்.

  இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.

  பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் ‘அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்?’ என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அப்போது வியாசர், “தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார்.

  அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும் ஒருசேரப் பெறலாம்.
  Next Story
  ×