என் மலர்tooltip icon

    வழிபாடு

    முன்னோர் சமாதியில் வழிபடும் தமிழர்கள்
    X
    முன்னோர் சமாதியில் வழிபடும் தமிழர்கள்

    முன்னோர் சமாதியில் வழிபடும் தமிழர்கள்

    பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, தங்கள் முன்னோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள புதர்களை நீக்கி சுத்தம் செய்துவிட்டு வருவார்கள்.
    தமிழர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் பண்டிகையாகத் திகழ்கிறது, பொங்கல் திருநாள். ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் தமிழர்கள், வெவ்வேறு முறைகளில் தங்களின் கலாசார அடிப்படையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அங்கு வாழும் தமிழர்கள், அன்றைய தினம் முன்னோர்களின் சமாதியில் வழிபாடு செய்யும் நிகழ்வு அரங்கேறுகிறது.

    வடகர்நாடகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உப்பள்ளி-தார்வாரும் ஒன்று. தலைநகர் பெங்களூருவில் இருந்து 412 கிலோமீட்டர் தூரத்தில் உப்பள்ளி அமைந்துள்ளது. அங்கு வசிக்கும் தமிழர்கள் தான் கல்லறை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகத்தில் இருந்தாலும் உப்பள்ளியில் தமிழர்களே அதிகளவில் வசிக்கின்றனர். கடந்த 1885-ம் ஆண்டு தென்கிழக்கு மாரத்தா ரெயில் துறை சார்பில், உப்பள்ளி கதக் ரோட்டில் ரெயில் பெட்டி, ரெயில் பெட்டி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தப்பட்டது.

    இந்த தொழிற்சாலையில் வேலைக்கு தமிழர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பணியமர்த்தப்பட்டனர். இதனால் தமிழர்கள் உப்பள்ளியில் வசிக்கத் தொடங்கினர். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்த தமிழர்கள் மூலம் அவர்களின் உறவினர்களும் உப்பள்ளிக்கு வந்துசேர்ந்தனர்.

    குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான் தற்போது உப்பள்ளியில் அதிகளவில் வசித்து வருகிறார்கள். உப்பள்ளி ரெயில்வே பணிமனை பகுதி, ராம்நகர், காந்திவாடா, சாந்திநகர், சங்கரர்சால், சிட்டிகுப்பிசால், குல்கர்னி ஹக்கல், மண்டூர் ரோடு, அரிச்சந்திர காலனி, உப்பள்ளி கூட்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் தமிழர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த மக்கள்தான் ஆண்டுதோறும் தமிழக பாரம்பரிய முறையில், உப்பள்ளியில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடிப்பார்கள். தமிழ்நாட்டைப் போலவே, இங்கும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள்.

    பொங்கலுக்கு மறுநாள், தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் உப்பள்ளியில் வாழும் தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இறந்துபோன முன்னோர்களின் நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, தங்கள் முன்னோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள புதர்களை நீக்கி சுத்தம் செய்துவிட்டு வருவார்கள்.

    பொங்கலுக்கு மறுநாள் அங்கு செல்லும் மக்கள், தங்களது முன்னோர்களின் நினைவிடத்தில் அகல் விளக்கு ஏற்றி வைத்து, முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகள், தின்பண்டங்களை படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள். கிறிஸ்துவ மக்கள் நடத்தும் கல்லறைத் திருவிழாவைப் போலவே, இது உப்பள்ளி தமிழர்கள் நடத்தும் கல்லறைத் திருவிழா. இந்த நடைமுறை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. அந்த நிகழ்வின்போது, உப்பள்ளி- மண்டூர் ரோட்டில் உள்ள சுடுகாடு, திருவிழா இடம்போல் காட்சியளிக்கும்.

    மாட்டுப் பொங்கல் அன்று தங்களது மூதாதையர்களின் சமாதியில் படையலிட்டு சிறப்பு பூஜை செய்வதால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பதும், அவர்களின் அனுக்கிரகம் தங்களது குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
    Next Story
    ×