என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்தப்படம்.
    X
    மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்தப்படம்.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை உப்பாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் உள்ளது.

    மாசாணியம்மனை தரிசிக்க கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருவார்கள். அமாவாசை உள்பட முக்கிய நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. பின்னர் மாசாணியம்மனுக்கு பல்வேறு வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றுவதற்காக சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டில் இருந்து மூங்கில் மரத்தை வெட்டி வந்து கொடியேற்றுவது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் சர்க்கார்பதி காட்டிற்கு சென்று 70 அடி நீளமுள்ள மூங்கில் கம்பை பக்தர்கள் வெட்டி எடுத்து வந்தனர்.

    பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து மூங்கில் கம்பத்துக்கு புடவை அணிவித்து சந்தனம், குங்குமம், வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    நேற்று இரவு கொடிக்கம்பம் மாசாணியம்மன் கோவில் அருகே உள்ள ஆழியாற்றிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆற்று தண்ணீரில் கம்பை ஊற வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இன்று காலை பக்தர்கள் ஆழியாற்றில் இருந்து கொடிக்கம்பத்தை தோளில் சுமந்து கொண்டு ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து, சரியாக 8.45 மணியளவில் கோவிலுக்கு வந்தனர்.

    அதனை தொடர்ந்து 8.48 மணியளவில் கோவில் முன்பு கொடிமரத்தை நட்டு குண்டம் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள், பொள் ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

    கொடியேற்றத்தையொட்டி ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தொடர்ந்து இன்று முதல் 18 நாட்களும் காலை, மாலை வேளைகளில் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேங்களும், பூஜைகளும் நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் மயான பூஜையும், 15-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜையும் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதலும், மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தல் மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.

    18-ந் தேதி காலை மஞ்சள் நீராடுதலும், இரவில் மகாமுனி பூஜையும் நடக்கிறது. 19-ந் தேதி மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    Next Story
    ×