
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு சிலதளர்வுகளை அளித்தது. இதைத்தொடர்ந்து பழனியில் இருந்து பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கு கோவில் நிர்வாகத்தினரால் தேர் கொண்டு வரப்பட்டது. பின்னர் தேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி தேரோட்டம் நடைபெற்றது. இதில் குழந்தை வேலப்பர் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் 4 ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரின் முன்பு ‘அரோகரா’ கோஷம் முழங்க அங்கபிரதட்சணம் செய்து தேங்காய்களை உடைத்து பாரம்பரிய முறைப்படி பழங்கால வாத்தியங்களை இசைத்து மலர்களை தூவினர். மிகவும் விமரிசையாக நடந்த இந்த திருவிழாவில் கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.