search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி
    X
    திருப்பதி

    கடந்த 2 ஆண்டுக்கு பிறகு திருப்பதியில் ஒரே நாளில் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

    ஆந்திராவில் தற்போது கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்தனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து தொற்றுப் படிப்படியாக குறைந்ததால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து 2500 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை வரவே அப்போதும் குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆந்திராவில் தற்போது கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டுமென தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் கடந்த 13-ந்தேதி திறக்கப்பட்டது. 22-ந்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    கடந்த 10 நாட்களில் வைகுண்ட வாசல் வழியாக 3.79 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15.14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ 26.6 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரே நாளில் 45,481 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,909 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.33 கோடி உண்டியல் வசூலானது. நேற்று 27,895 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,631 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.ரூ.3.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    Next Story
    ×