search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது

    வருகிற 14-ந் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இவ்விழா பகல் பத்து, ராப்பத்து என 20 நாட்கள் விமரிசையாக நடைபெறும். வருகிற 14-ந் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைகூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் முத்தரசு, சக்திவேல், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் கோவிலில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் ரங்கா, ரங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், கருடாழ்வார் சன்னதி, ஆரியபட்டா வாசல், கொடிமரம், துரை பிரகாரம், அர்ஜுன மண்டபம், கிளிமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், பரமபத வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி உள்பட கோவில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×