search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பனை தரிசிக்க நேற்று சபரிமலையில் குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    ஐயப்பனை தரிசிக்க நேற்று சபரிமலையில் குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    முன்பதிவு செய்த பக்தர்களில் 66 சதவீதம் பேர் சபரிமலையில் தரிசனம்

    சபரிமலையில் கடந்த 27-ந்தேதி வரை ரூ.12 கோடி நடை வருமானம் (காணிக்கை, அப்பம், அரவணை மற்றும் இதர வருவாய் உட்பட) வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆரம்பத்தில் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    நேற்றுமுன்தினம் வரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 20 பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 682 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். அதாவது 66 சதவீதம் பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பலத்த மழை, பம்பை ஆற்றில் குளிக்க தடை, சன்னிதானத்தில் ஓய்வெடுக்க கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது.

    பக்தர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில் சன்னிதானத்தில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், கூடாரங்கள் அமைத்து ஓய்வெடுக்கவும், அறைகள் எடுத்து தங்குவதற்கான நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

    சபரிமலையில் கடந்த 27-ந்தேதி வரை ரூ.12 கோடி நடை வருமானம் (காணிக்கை, அப்பம், அரவணை மற்றும் இதர வருவாய் உட்பட) வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சபரிமலை சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    பம்பையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் போலீஸ் உட்பட 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றிய போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சபரிமலையில் நேற்று சென்னையை சேர்ந்த சந்திரமவுலி என்பவர் தலைமையில் திரிசூல காவடியுடன் வந்து பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர்.
    Next Story
    ×