search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி “தபசு” அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
    X
    உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி “தபசு” அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி

    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலையில் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவிழாவையொட்டி கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாககொறடு மண்டபத்தில் தினமும் ஒருவேளை யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது.

    உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை விசேஷ பூஜையும் தினமும் ஒரு அலங்காரம் நடைபெற்று வருகிறது.இதேபோல சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு தினமும் 2 வேளை சண்முகார்ச்சனை நடைபெற்று வருகிறது. மேலும் 2 வேளையிலும் சுவாமிக்கும், அம்பாள்களுக்குமாக வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    திருவிழாவையொட்டி நேற்று உற்சவர் சன்னதியில் தெய் வானையுடன் சுப்பிரமணியசாமி தபசு அலங்காரத்திலும், சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமான் மயில்வாகன சேவை அலங்காரத்திலுமாக அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று (திங்கட்கிழமை) மாலையில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக கோவிலுக்குள் நடக்கிறது. இருமாப்பு கொண்ட சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகை இடமிருந்து சக்திவேல் பெறுகிறார்.

    இதனையொட்டி கோவிலுக்குள் சத்தியகிரீஸ்வரரும், முருகப்பெருமானும் அடுத்தடுத்து எழுந்தருளுகின்றனர். இந்த நிலையில் கோவிலின் கருவறையில் அருள்பாலிக்கும் சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய தெய்வங்களிடம் இருந்து அனுமதி பெறுதல்நடக்கிறது.

    தொடர்ந்து கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்தி வேலான நவரத்தின வேல் பெற்று சகல பரிவாரங்களோடு மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு வந்து சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான (செவ்வாய்க்கிழமை) சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரமும், 10-ந் தேதி (புதன்கிழமை) உச்ச நிகழ்ச்சியாக பாவாடை தரிசனமும் நடக்கிறது.
    Next Story
    ×