search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை
    X
    சபரிமலை

    கார்த்திகை சீசன் முதல் சபரிமலையில் பக்தர்கள் அபிஷேக நெய் நேரடியாக கொடுக்கலாம்

    வருகிற கார்த்திகை மாத சீசனில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதற்கான கூடுதல் வசதிகளை செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்கனவே உள்ள வசதிகள் மற்றும் இன்னும் எதிர்பார்க்கப்படும் வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன்-குருவாயூரப்பன் கோவிலில் உள்ள சன்னிதானம் அரங்கில் நேற்று நடந்தது.

    திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் என்.வாசு மற்றும் உறுப்பினர்கள் கே.எஸ்.ரவி, பி.எம்.தங்கப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் சென்னையில் உள்ள பல்வேறு ஐயப்பன் கோவில்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், குருசாமிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஐயப்பா பக்த சபை செயலாளர் சசிகுமார், இணை செயலாளர் கே.பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    பின்னர் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் என்.வாசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வரை 1 நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கேரள மாநிலத்தில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வருகிற கார்த்திகை மாத சீசனில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதற்கான கூடுதல் வசதிகளை செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.

    சபரிமலைக்கு பக்தர்கள் தேங்காயில் அடைத்து கொண்டு வரும் நெய்யை அதற்கான கவுண்டரில் செலுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையில் சற்று மாற்றம் செய்து முன்பு இருந்தது போன்று பக்தர்கள் நேரடியாகவே சன்னிதானத்தில் அவர்கள் கொண்டு வரும் நெய்யை அபிஷேகத்துக்கு வழங்கும் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தங்குமிடம் வசதி, உணவு, போக்குவரத்தையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பை ஆற்றில் குளிப்பது புனிதமாக கருதப்படுகிறது. போக்குவரத்து கடந்த 2 ஆண்டுகளாக பம்பை வரை அனுமதிக்கப்படவில்லை. வரவிருக்கும் சீசனில் பம்பை வரை போக்குவரத்தை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கொரோனா காலத்தில் சபரிமலைக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதிலும் மாற்றம் செய்யப்பட்டு 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரையும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தகவல் மையம் மீண்டும் முறையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×