search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை திருப்பணியை பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை திருப்பணியை பார்வையிட்ட போது எடுத்த படம்.

    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் குடமுழுக்கு 24-ந் தேதி நடக்கிறது

    24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 6 மணிக்கு கடங்கள் புறப்பாடும், 7 மணிக்கு அனைத்து பரிவார விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது.
    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் கிரிகுஜாம்பிகை நாகநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கண்டராதித்த சோழன், தமிழ் புலவர் சேக்கிழார், கோவிந்த தீட்சதர் உள்ளிட்டோரால் திருப்பணி செய்யப்பட்ட 7 ராஜகோபுரம் உள்ளது. மேலும் தனிக்கோயில் கொண்டு சுயம்புவாக எழுந்தருளிய லட்சுமி சரஸ்வதியுடன் பார்வதி தேவி கிரிகுஜாம்பிகையும் நாகவல்லி நாகக்கன்னி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இங்கு தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ராகு பகவானுக்கு ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. பால் அபிஷேகம் செய்யப்படும் போது ராகுபகவான் சரீரத்தில் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் தற்போதும் நடைபெறுகிறது.

    பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆலயம் முழுவதும் சுமார் ரூ. 5 கோடியில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் குடமுழுக்கு நடத்த தயார் நிலையில் உள்ளது. வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை குடமுழுக்கு நடக்கிறது.

    நேற்று காலை மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. செ.ராமலிங்கம் எம்.பி., குடமுழுக்கு நடைபெற உள்ள நாகநாதர் கோவில் யாகசாலை மண்டபங்களை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். நாளை ( வியாழக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி நடக்கிறது.

    24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 6 மணிக்கு கடங்கள் புறப்பாடும், 7 மணிக்கு அனைத்து பரிவார விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது. காலை 9 மணிக்கு பிரதான தெய்வங்களுக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாரதனை நடக்கிறது. 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடக்கிறது. 10.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது.

    காலை 11 மணிக்கு மூல ஆலய குடமுழுக்கு, தீபாராதனை நடக்கிறது . மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும் திருக்கல்யாணமும் பஞ்சமூர்த்திகள் மகா தீபாராதனையும் நடக்கிறது.

    குடமுழுக்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எம்.பி.க்கள் செ.ராமலிங்கம், சண்முகம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், க.அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் சு. கல்யாணசுந்தரம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். குடமுழுக்கு ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி. நித்யா மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்
    Next Story
    ×