search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
    X
    உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

    தங்க கவசத்தில் மணக்குள விநாயகர் தரிசனம்

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.
    கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது.

    கொரோனா விதிமுறைகளுடன் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நுழைவாயிலில் வெப்ப பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. அர்ச்சனை செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது.

    கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வரும் இடத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருந்தனர்.

    கோவில் வளாகத்தில் பக்தர்கள் யாரையும் அமர அனுமதிக்கவில்லை. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி தரிசனம் செய்ததும் உடனடியாக வெளியேற பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

    நேற்று இரவு 8.30 மணியளவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

    முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கணபதி நகர் பெரியாண்டவர் கோவில், திருவள்ளுவர் நகர் குரு வேலாயுதம் ஈஸ்வரர் கோவில், நெல்லித்தோப்பு வரசித்தி விநாயகர் உள்பட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    காந்தி வீதி, பாரதி வீதி, பழைய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட், கடலூர் ரோடு, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள், பூஜைப்பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. சிறிய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் வைத்து வழிபட தங்களுக்கு பிடித்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர். இதுதவிர விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்ய தேவையான வண்ணக்குடைகள், அருகம்புல் மாலை, எருக்கம் பூ மற்றும் பூஜைக்கு தேவையான அவல், பொரி, பழங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

    தொடர் விடுமுறை காரணமாக நேற்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    Next Story
    ×