search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    X
    கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிள்ளையார்பட்டியில் நாளை, தீர்த்தவாரி உற்சவம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிள்ளையார்பட்டி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில், பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா எளிமையாக நடைபெற்றது.

    இதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக எளிமையாகவே விழா நடைபெற்று வருகிறது.

    இந்த விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    6-ம் திருவிழா அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு 9-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    நாளை(வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் அருள்பாலிக்கிறார். பின்னர் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    எனவே தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நாளை விநாயகர் சதுர்த்தி முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்களுக்கு பிள்ளையார்பட்டி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

    நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை பிள்ளையார்பட்டி கோவில் யூடியூப் சேனல் வழியாக பக்தர்கள் வீட்டில் இருந்து பார்த்து தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×