என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.
    X
    அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில்ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை வழிபட வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். கோவிலில் விடுமுறை நாட்கள், விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 7-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை உற்சவர் சந்திரசேகர் மற்றும் விநாயகர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

    ஆனி பிரம்மோற்சவம் நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தீர்த்தவாரி நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடந்தது. அதற்காக, பாரம்பரிய நடைமுறையின் படி அய்யங்குளத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.

    முன்னதாக சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னா் கோவில் வளாகத்தில் பெரிய நந்தியிடம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரிய நந்தி பின்புறம் உள்ள மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது

    மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சூலத்துக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்புப்பூஜை நடந்தது.
    Next Story
    ×