என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தானியங்கி எந்திரங்கள் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு கைகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 5-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து முன்ேனற்பாடு பணிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ராஜகோபுர வாசல் திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சாமி சன்னதியில் தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று அங்கிருந்து கோவில் பின்புற வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    கோவிலுக்குள் வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டனர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தானியங்கி எந்திரங்கள் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு கைகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று உள்ளூர் மட்டுமின்றி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று குறைந்த அளவிலான பக்தர்களே கோவிலுக்கு வந்திருந்ததால் அவர்கள் வெகு நேரம் வரிசையில் காத்திருக்காமல் சீக்கிரமாக சாமி தரிசனம் செய்தனர். சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×