என் மலர்

  ஆன்மிகம்

  சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் மயானத்துக்கு புறப்பட்டு சென்ற காட்சி.
  X
  சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் மயானத்துக்கு புறப்பட்டு சென்ற காட்சி.

  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  இதையொட்டி அன்றைய தினம் இரவில் சக்தி கரகம் ஊர்வலம் நடைபெற்றது. அக்னி குளத்தில் புறப்பட்ட சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று காலை கோவிலை வந்தடைந்தது.

  அதன்பிறகு சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  இதேபோல் உற்சவ அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு கோவிலின் உட்புறம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பம்பை மேளம் முழங்க உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மன் வடக்கு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

  11 மணி அளவில் பிரம்ம கபாலம் (கப்பரை முகம் என்று கூறப்படுகிறது) ஏந்தி பூசாரிகள் ஆடியபடி மயானத்தை நோக்கி் புறப்பட்டனர். 11.30 மணிக்கு அங்காளம்மன் மயானத்தில் எழுந்தருளியவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  பின்பு அங்கு குவித்து வைத்திருந்த சுண்டல், கொழுக்கட்டை, காய்கறிகள், பழங்கள், வயலில் விளைந்த தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் வாரி இறைத்தனர். அப்போது் மயானத்தில் அம்மன் ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுவே மயானக்கொள்ளை என்றும் சிவபெருமானுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகவும் ஐதீகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  விழாவின்போது அம்மன் வேடமிட்டு வந்த பக்தர்கள் கோழிகளை கடித்துச் சென்றபடி நடந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். முன்னதாக அம்மன் வேடமிட்டு ஆடியபடி வந்தவர்களை கண்ட பக்தர்கள் சாலையில் படுத்தனர். அவர்கள் மீது அம்மன் வேடமிட்டவர்கள் நடந்து சென்று ஆசி வழங்கினர். இவ்வாறு செய்தால் நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனை தொடர்ந்து இரவில் அம்மன் பூதவாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

  விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவில் பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதிஉலா நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. இவ்வாறு தினசரி அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். விழாவில் தீமிதி திருவிழா 16-ந்தேதியும், தேரோட்டம் 18-ந்தேதியும் நடைபெற இருக்கிறது.
  Next Story
  ×