search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்ட போது எடுத்த படம்.
    X
    சபரிமலையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்ட போது எடுத்த படம்.

    மகர விளக்கு சீசன் நிறைவு: சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது

    மகரவிளக்கு சீசன் நிறைவை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படுகிறது.
    சபரிமலை :

    மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது.

    டிசம்பர் 26-ந் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 30-ந்தேதி திறக்கப்பட்டு, 31-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன.

    சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை 14-ந் தேதி அன்று நடந்தது. ஐயப்ப சாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அந்த சமயத்தில் ஐதீக முறைப்படி பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் சுவாமி காட்சி அளித்தார்.

    கொரோனா காரணமாக 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே மகர விளக்கின் போது சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நேற்றுமுன்தினம் வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அன்று இரவு 9 மணிக்கு பிரசித்தி பெற்ற குருதி சமர்ப்பன சடங்கு சன்னிதானத்தில் நடந்தது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 6.20 மணிக்கு பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள் பிரதீப் குமார் வர்மா, சுரேஷ் வர்மா ஆகியோர் ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது. பின்னர், 18-ம் படி வழியாக இறங்கி வந்த ராஜகுடும்ப பிரதிநிதிகளிடம் கோவில் சாவி ஒப்படைக்கப்பட்டது.

    பிறகு பாரம்பரிய முறைப்படி, கோவில் சாவி மேல்சாந்தி ஜெயராஜ் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கொண்டு வரப்பட்ட திருவாபரணங்கள் சன்னிதானத்தில் இருந்து பந்தளம் அரண்மனைக்கு மீண்டும் எடுத்து செல்லப்பட்டதை தொடர்ந்து நடப்பு ஆண்டின் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவடைந்தது.

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    Next Story
    ×