search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்னாபிஷேகம்
    X
    அன்னாபிஷேகம்

    அன்னாபிஷேகம் உருவான கதை

    நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் சொல்வார்கள்.
    சிவபெருமானைப் போல, பிரம்மனுக்கும் முன்பு 5 தலைகள் இருந்தன. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். இதையடுத்து பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையைக் கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும்போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம்.

    சிவபெருமான் காசிக்குச் செல்லும்போது, அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதையடுத்து பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாத பவுர்ணமி ஆகும். எனவேதான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு, அன்னபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த அபிஷேகங்களில் மிகவும் சிறப்பானது, அன்னாபிஷேகம்.

    ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான்.

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். சந்திரனை தன்னுடைய சடைமுடியில் சூடிய சிவபெருமானுக்கு, அந்த சந்திரன் முழு மதியாக ஒளிரும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதில் வியப்பென்ன இருக்கிறது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் சொல்வார்கள்.

    அன்னாபிஷேகம் செய்வது எப்படி?

    சமைத்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு, சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்- கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் செய்யப்படும். வழிபாடு முடிந்த பிறகு, லிங்கத்தின் ஆவுடையிலும் அடிப்பாகத்திலும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று, கோவில் குளத்திலோ அல்லது ஆற்றிலோ அல்லது பிற நீர்நிலைகளிலோ கரைப்பார்கள். அவை நீர்வாழ் உயிர்களுக்கு உணவாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் மேல் பாகத்தில், அதாவது பாணத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம், மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படும். இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
    Next Story
    ×