search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூஜைக்காக மலையில் குவிந்திருக்கும் மக்கள்
    X
    பூஜைக்காக மலையில் குவிந்திருக்கும் மக்கள்

    அத்ரி- அகத்திய முனிவர்களுக்கான வழிபாடு

    இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை தாகத்தில் வாட்டி வதைக்கிறது. அணைகளும், நதிகளும் வறண்டு போய்விட்டன. பயிர்கள் வாடுகின்றன. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என பல இடங்களில், இறைவனை நோக்கி வேண்டி நிற்கிறார்கள், விவசாய பெருமக்கள்.

    மக்களுக்கு மட்டும்தானா தாகம். உலகில் வாழும் ஜீவராசிகளுக்கெல்லாம் தாகம்தான். அந்த தாகம் தீருமா? மழை வருமா? என இறைவனை வழிபடும் ஆன்மிக அன்பர்களும் ஏராளம். இப்படி மழைக்காக நம் நாட்டில் பல வகையான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கொஞ்சம் வித்தியாசமானது, குற்றால மலை உச்சியில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு செய்யும் பூஜை. இந்த பூஜையில் சப்த ரிஷிகளில் தலைமை ரிஷியான அத்ரி மகரிஷிக்கும், பதினெட்டு தவ முனிவர்களில் தலைமை முனிவரான அகத்தியர், அவரது சீடர் தேரையர் ஆகியோருக்கு வழிபாடு நடைபெறுகிறது.

    தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் தோன்றும் ஒவ்வொரு நதியும் தமிழக மக்கள் வளத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் வானம் பொய்த்து விட்டால், பூமி வறண்டு விடும். அந்த வேளையில் நமக்கு ஒரே நம்பிக்கை இறைவழிபாடுதான். அப்படி ஆண்டு தோறும் மழைக்காக நடத்தப்படும் வழிபாடுகளில் ஒன்றுதான் இது.

    குற்றால மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பழங்கள் உள்பட பூஜை பொருட்களை சேகரித்துக்கொண்டு கடுமையான மலை பயணத்துக்கு தயாராகி விடுவார்கள். இந்த பயணம் குற்றாலம் மலையின் உச்சியில் உள்ள தெற்கு மலை எஸ்டேட் ஆன்மிக பயணம் என அழைக்கப்படுகிறது. நினைத்தநேரத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. வருடத்துக்கு ஒரு நாள் வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த பயணத்தை தொடர முடியும். இதனால் மழை வேண்டி பூஜை செய்ய வனத்துறை அனுமதி பெற்று கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    சிற்றாறு, மலை முகட்டில் ஓடி வரும் கரை வழியேதான் இந்த பயணம் செல்கிறது. பல இடங்களில் இந்த நதியில் இறங்கி, ஏறி மறுகரை சென்று, வளைந்து நெளிந்து பள்ளதாக்கில் ஏறி சென்றுதான் பூஜை செய்கிறார்கள்.

    குற்றாலம் மெயின் அருவியும், அருகில் உள்ள சிற்றருவியும், புலியருவியும் பலரும் அறிந்த அருவிகள். ஆனால் அதைத் தாண்டி மலை பயணத்தைத் தொடர்ந்து, செண்பகாதேவி அம்மன் கோவிலும், அதன் அருகே ஒய்யாரமாய் விழும் செண்பகாதேவி அருவியும் இன்னும் கூட சிலர் அறியாத இடமாக உள்ளது. இவ்விடங்கள் எல்லாமே தவசித்தர்கள் வாழும் பகுதி என்று சொல்கிறார்கள். அகத்தியர், குற்றாலத்தில் பெருமாளை, சிவலிங்கமாக மாற்றிவிட்டு, செண்பகாதேவி காட்டு வழியாக அத்ரிமலை மற்றும் பொதிகை மலைக்கு சென்ற வழித்தடம்தான் இது.

    இவ்விடத்தில் அபூர்வக் குகைகள் பல உள்ளன. இங்கு தட்சிணாமூர்த்தி குகை, வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தவமேற்றிய கசாய குகை, செண்பகாதேவி அருகில் உள்ள அகத்தியர் குகை உள்பட பல குகைகள் தவத்திற்கு ஏற்றது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 18 சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் சப்த ரிஷிகள் உள்பட பல ரிஷிகளும் தவமிருந்த இடம். சித்திரா பவுர்ணமி அன்று இந்த செண்பகாதேவி அருவியில் அம்மன் நீராட சப்பரத்தில் வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

    தட்சிணாமூர்த்தி குகையில் அமர்ந்திருந்தால், அருவியே நமது மேல் கொட்டுவது போன்ற அற்புதத்தை உணரலாம். தொடர்ந்து கரை வழியே சென்றால் கசாய குகை. அதில் சித்தர்கள் நீராடும் தடாகம் இருக்கிறது. மீண்டும் நதியில் பயணத்தை மேற்கொண்டால், அற்புதமான தேனருவி காட்டுக்குள் நுழையலாம். தேனருவி என்பது ‘சிவமதுகங்கை’ என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு சித்ரா பவுர்ணமி தோறும் ஈசனை, அம்பாள் உள்பட தேவர்கள் அனைவரும் தேனால் அபிஷேகம் செய்வதாக நம்பிக்கை. எனவேதான் இங்குச் சித்ரா பவுர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. இந்த மஞ்சள் மழை துளிகளை, அங்குள்ள பாறைகளில் காணலாம். இப்போதும் கூட வெள்ளை வேஷ்டியை முதல் நாள் விரித்து வைத்து விட்டு, மறுநாள் போய் பார்த்தால் அந்த வேஷ்டி மஞ்சளாக இருப்பது அதிசயம்தான். இதுபோன்ற அபூர்வ இடங்களை கொண்டது தான் சித்தாற்றங்கரை. தற்போது தேனருவி செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது.


    தண்டத்திற்கு நடைபெறும் பழ அபிஷேகம்

    இந்த நதிக்கரையில்தான் மழை வேண்டி நடைபெறும் அபூர்வ பூஜை நடக்கிறது. இதற்காக காலை 7 மணிக்கு ஊர்மக்கள் குற்றாலம் சிற்றருவி அருகே ஒன்று கூடுவார்கள். பூஜை பொருட்களை எல்லாம் டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்வார்கள். ஓரளவு வயதானவர்கள் இந்த டிராக்டரில் ஏறி கொள்வார்கள். மற்றவர்கள் நடைபயணம்தான். முதலில் நாம் செல்வது, ‘பிரிஞ்சு பார்த்தான் பாறை' (இந்த பாறையில் இருந்து குற்றாலம் அழகை ரசிக்கலாம்). தொடர்ந்து மூலிகை தோட்டம் அதைத் தாண்டி மேலே செல்லவேண்டும்.

    டிராக்டர் வழித்தடத்தில் சென்றால் நேரம் பிடிக்கும். ஆகவே குறுக்கு வழியாக உள்ள ஏற்றம் வழியாக ஏறி காத்தாடி மொட்டை என்ற பகுதிக்கு வந்து, மேலே ஏறிச்செல்லும் போது புங்கன்சோலை வருகிறது. அடர்ந்த காடு. எங்கும் வித்தியாசமான பறவைகளின் இன்னிசை. சோர்வு தெரியாமல் இருக்க நமது முகத்தில் அடிக்கும் தென்றல், புது உற்சாகத்தைத் தரும். இந்தச் சோலையை அடுத்து மேலே ஏறினால் ‘நெல் தீ மொட்டை' என்ற பகுதி வருகிறது. அங்கு உள்ள மஞ்சள் மாரியம்மனை வணங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்.

    தெற்கு மலை எஸ்டேட்டுக்குள் நுழைகிறோம். இது தனியாருக்கு சொந்தமான எஸ்டேட். இங்கு மங்குஸ்தான் பழங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியாக சொல்லப்போனால் தேனருவிக்கு மேல்தளத்தில் தான் இவ்விடம் உள்ளது. உள்ளே நுழைந்து சிற்றாற்றை கடக்கிறோம். அங்கு நிறைய நறுவளி செடிகள் ஆற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இவ்விடத்தில் காலை வைத்தால் ஆன்மிக அதிர்வை உணரலாம். இந்த அதிர்வுதான் குற்றாலத்தில் குளித்தால் மனநோய் தீருகிறது என்பதைச் சொல்லும் அறிவியல் உண்மை.

    அடுத்து தபால்காரன் பாறை. அந்த காலத்தில் குற்றால மலைக்கு மேலே கண்ணாடி பங்களாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு, தபால் வந்தால் இந்த பாறையில் தான் உள்ளூர் தபால்காரர்கள் கொண்டு வந்து வைப்பார்களாம். ஆங்கிலேயர்கள் குதிரையில் வந்து தபாலை எடுத்து செல்வார்களாம். தபால்காரன் பாறையை அடுத்து, பரதேசி புடை உள்ளது. இதை அடைவதற்கு மீண்டும் சிற்றாற்றின் எதிர்கரைக்கு வரவேண்டும். இந்த புடையானது அகத்தியர் தவம் இருந்த பகுதி.

    தொடர்ந்து பயணித்தால், ‘யானை உச்சான் பாறை' வரும். யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று இந்த பாறைகளில் உரசிக்கொண்டு நிற்பதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்து யானை ஓய்வெடுக்கும் ‘யானை அசண்டி.' அதைத் தாண்டினால், ‘சென்ற ராமன் கல்' என்ற இடம் உள்ளது. இவ்விடம் ராமன் சீதாபிராட்டியுடன் கடந்து சென்ற இடமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அகத்தியர், ராவணன் இசைப் போட்டியின்போது உருகிய மலை இருக்கிறது. அதன் அடிவாரத்தில் சிற்றாற்றங்கரை நடுவில் அகத்தியர் பாதம் உள்ளது. இங்கு சென்று அகத்தியர் பாதத்தினை வணங்கி விட்டு மீண்டும் பயணிக்கிறோம்.

    குற்றால மலையில் 2,500 மூலிகை செடிகள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அதன் வாசம் இவ்விடத்தில வீசுகின்றன. இந்த வழியாக நாம் கடந்து சென்றாலே போதும், நமது உடலில் உள்ள நாள்பட்ட நோய் தீர்ந்து விடும். தொடர்ந்து ‘அரிசிப்பட்டிப் பாறை.’ அதைத் தாண்டி கடினமானப் பயணம். இரண்டு முறை ஆற்றைக் கடந்து சென்றால் ஒரு பாறையில் போய் நிற்கிறோம். அந்தப் பாறையில் 2 அடியில் தண்டம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் தற்போதும் அகத்தியர், அத்ரி, தேரையர் ஆகிய மகா முனிவர்கள் தவம் செய்வதாக நம்பப்படுகிறது.

    தண்டமானது, பாறை குழியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்றாற்றில் அடித்து செல்லும் வெள்ளம் இந்த தண்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது மிகப்பெரிய அதிசயம்தான். அங்கு தான் மழை வேண்டி சிறப்பான பூஜை நடைபெறுகிறது. இந்தபூஜையில் ரசமும், ரொட்டியும்தான் சிறப்பு பிரசாதம். இந்த பிரசாதத்தை தயார் செய்யும், பூசாரி வாயை கட்டிக்கொண்டு செய்கிறார்.

    அதன் பின் தண்டத்துக்கு சிறப்பு பூஜை அலங்காரம், ஆராதனை நடைபெறும். கூடி நின்ற மக்கள் எல்லோரும் அந்த தண்டத்தின் முன்ப விழுந்து நெடுஞ்சாண் கிடையாய் கிடந்து மழை வேண்டி பூஜை செய்வார்கள். அதில் சிலர் இறைவனின் அருள் வந்து, அருள்வாக்கும் கூறுவார்கள். மதிய வேளைக்குள் இந்த வழிபாடுகள் முடிவடைந்து விடும். அதன்பின் அனைவரும் மலையில் இருந்து கீழே இறங்குவார்கள். அவர்கள் கீழே வருவதற்குள் மழை பெய்யும் என்பது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கண்கூடாக காணும் உண்மை.

    இந்த பூஜைக்கு பின்னர் தான், விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான விவசாய வேலையை ஆரம்பிக்கிறார்கள். ஆச்சரியமான இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் வந்து, காலை 7 மணிக்கு தங்களது ஆதார் அட்டையை வனத்துறையிடம் காண்பித்து, இந்த பூஜையில் கலந்துகொள்ளலாம்.
    Next Story
    ×