என் மலர்

  ஆன்மிகம்

  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்
  X

  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழாவும், 5-ம் நாள் தீமிதி விழாவும் நடைபெற்றது. விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து இரவு யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.

  7-ம் நாள் விழாவான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். விழாவையொட்டி பனை, காட்டுவாகை, புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு மேற்கு வாயிலின் எதிரே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தேர் பூமாலைகள், வாழை குலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

  தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலின் வடக்கு வாயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவ அம்மனை பம்பை- உடுக்கை, மேளதாளங்களுடன் அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு மாலை அணிவித்தவுடன், தேரில் எழுந்தருளினார். பின்னர் முக்கியஸ்தர்களுக்கு கோவில் அறங்காவலர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடந்து அம்மனுக்கும், தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  இதையடுத்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஓம் சக்தி அங்காளம்மனே என்றும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அதன்பிறகு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  தேரில் எழுந்தருள்வதற்காக அங்காளம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டபோது எடுத்த படம்.

  தேரோட்டத்தின் போது பக்தர்கள் பலர் கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அம்மன் வேடமணிந்து வந்தவர்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். மேலும் மேல்மலையனூர் வள்ளலார் திருச்சபை சார்பில் நீர்மோர், கஞ்சி, கூழ் ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

  விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, பெங்களூருவில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், வெங்கடேசன், தாசில்தார் செந்தில்குமார், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரகாஷ் உள்பட லட்சக்கணக் கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சுகா தாரத்துறையினர் கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் கிடந்த குப்பை களை உடனுக் குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

  விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக் கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீ சார் தீவிரமாக கண்காணித் தனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

  விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் மேல் மலையனூர் பிரகாஷ், விழுப் புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகன சுந்தரம், கண் காணிப்பாளர் வேலு, ஆய் வாளர் அன்பழகன் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர். முன்னதாக தேரோட்டத் தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். விழாவின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யில் யானை வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
  Next Story
  ×