search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலில் புதிதாக தோண்டப்பட்ட தீர்த்த கிணறு ஒன்றில் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.
    X
    ராமேசுவரம் கோவிலில் புதிதாக தோண்டப்பட்ட தீர்த்த கிணறு ஒன்றில் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    ராமேசுவரம் கோவிலில் புதிய தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடினர்

    ராமேசுவரம் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கிணறுகள் பூஜைகளுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வந்தன. பக்தர்கள் புனித நீராடினர்.
    அகில இந்திய புண்ணியதலமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பின்னர் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலுக்குள் அமைந்துள்ள 1-வது தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தம் முதல் 6 தீர்த்தம் வரை மிகவும் குறுகலான பாதையில் அமைந்திருந்தன.

    இதையடுத்து ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். குறுகலான இடத்தில் அமைந்துள்ள 1 முதல் 6 தீர்த்தக்கிணறுகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கோவிலின் 2-ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் புதிதாக 6 தீர்த்தக் கிணறுகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்தன.

    இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது தீர்த்தக் கிணறுகளை இடமாற்றம் செய்வதற்கு அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடமாற்றம் செய்வது ஆகம விதிக்கு எதிரானது எனவே இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோவில் இணை ஆணையரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி அவர்களை சமரசம் செய்தார். இதையடுத்து இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்துசென்றனர்.

    அதனை தொடர்ந்து நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிச்சை குருக்கள் தலைமையில் கோவில் குருக்கள் 5 பேர் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசத்தை தலையில் சுமந்து 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு வந்து அதில் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவில் தக்கார் குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார், கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் அண்ணாதுரை, செல்லம், கண்ணன், கலைச்செல்வன், கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்த புதிய தீர்த்தக்கிணறுகளில் பக்தர்கள் நீராடலாம் எனவும், யாத்திரை பணியாளர்கள் இவற்றில் இருந்து நீர் இரைத்து பக்தர்கள் மீது ஊற்றலாம் என்றும் இணை ஆணையர் மங்கையற்கரசி தெரிவித்தார். மேலும் பழைய தீர்த்தக்கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன. ஆனால் இணை ஆணையர் தெரிவித்தும் யாத்திரை பணியாளர்கள் புதிய தீர்த்தக் கிணறுகளில் நின்று தண்ணீர் ஊற்றமாட்டோம் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் இணை ஆணையர் தலைமையில் யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சங்க தலைவர் பாஸ்கரன், கோவிலில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் எழுத்துபூர்வமாக எங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு யாத்திரை பணியாளர்கள் சங்கத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதில்லை. புதிய தீர்த்தக் கிணறுகள் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கும் எங்களை அழைக்கவில்லை.

    புதிய தீர்த்தக் கிணறுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், அதில் யாத்திரை பணியாளர்கள் தீர்த்தம் எடுத்து பக்தர்களுக்கு ஊற்ற வேண்டும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் தான் யாத்திரை பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார். அதற்கு இணை ஆணையர் இது ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இடநெருக்கடியை சமாளிக்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனால் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை புதிய தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராட வந்தும் யாத்திரை பணியாளர்கள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து இணை ஆணையர் யாத்திரை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து அந்த தீர்த்தக் கிணறுகளில் யாத்திரை பணியாளர்கள் நின்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். தற்போது மகாலட்சுமி தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தங்கள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×