search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தரணி புகழும் தாமிரபரணி
    X

    தரணி புகழும் தாமிரபரணி

    ஒவ்வொரு நதிக்கும் ஒரு வரலாறு உண்டு. தாமிரபரணியின் வரலாறு தெய்வாம்சம் நிறைந்தது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு நதிக்கும் ஒரு வரலாறு உண்டு. தாமிரபரணியின் வரலாறு தெய்வாம்சம் நிறைந்தது.

    தட்சனின் மகளும், சிவபெருமானின் மனைவியுமானவர் தாட்சாயிணி. தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்க மறுத்துவிட்டான். இதை அறிந்த தாட்சாயிணி கடும் கோபம் அடைந்து யாக சாலைக்கு சென்று யாகத்தில் குதித்துவிட்டாள். மறுபிறவியில் இமவான் மகளாக பார்வதிதேவி அவதாரம் செய்தார். அவர் பரமேசுவரனை திருமணம் செய்வதற்காக பராசக்தியை இடைவிடாது பூஜை செய்தார்.

    அவரது பூஜைக்கு மனம் மகிழ்ந்த பராசக்தி, பார்வதி முன்தோன்றி அவரை ஆசீர்வதித்து, ‘உன் விருப்பம் நிறைவேறும்’ என்று ஒரு தாமிர புஷ்ப மாலையை பரிசாக அளித்தார். இந்த மாலையால் உலகுக்கு நன்மை ஏற்படும் என்று கூறி வாழ்த்தினார். பின்னர் சிவன்-பார்வதியின் திருமண நிகழ்ச்சி தொடங்கியது. இந்த அரிய திருமணத்தைக் காண மூவுலகில் உள்ள தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வந்து குவிந்தனர். சிவன்-பார்வதி திருமணத்தை காண அகத்தியர் தன் மனைவி லோபா முத்திரையுடன் வந்து இருந்தார்.

    உலகம் முழுவதும் பூமியின் வடதிசையில் கூடி இருந்ததால் பாரம் தங்காமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உடனே சிவபெருமான் உலகை சமன் செய்யும் பொருட்டு அகத்திய முனிவரை, லோகமுத்திரையுடன் தென்திசை செல்லும்படி உத்தரவிட்டார். சிவபெருமானின் திருமணக் கோலத்தை காண முடியவில்லையே என்று அகத்தியருக்கு வருத்தம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் அகத்தியரிடம் தன்னுடைய திருமணக் காட்சியை அவர் இருக்கும் இடத்தில் காட்டுவதாக உறுதி அளித்தார்.

    முன்பு பார்வதிக்கு பராசக்தியால் அளிக்கப்பட்ட தாமிர மாலையை சிவன் அகத்தியரிடம் அளித்தார். அந்த மாலையை அகத்தியர் பெற்றுக்கொண்டபோது திடீரென அது அழகிய பெண்ணாக உருமாறியது. இதைக் கண்ணுற்ற அங்கு கூடியிருந்த தேவர்கள் பூ மாரி பெய்தனர்.

    தாமிர மாலையில் இருந்து தோன்றியதாலும், நல்ல சிவந்த நிறம் உள்ளதாலும் தாமிரபரணி என்றும் பலவாறு புகழ்ந்து போற்றினர். மேலும் அந்த தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி உருவம் பெற்று சிறந்த மேன்மையை உண்டாக்குவாள் என்றும் ஈஸ்வரன் அருள்வாக்கு கூறி அவளையும் தன்னோடு தென்திசைக்கு அழைத்துச் செல்லுமாறு அகத்தியருக்கு உத்தரவிட்டார்.

    அகத்தியரும் தாமிரபரணியுடன் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தாமிரபரணி உரிய காலம் வந்த உடன் நதி வடிவம் அடைந்தாள். பின்னர் பொதிகை மலையில் உள்ள குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருந்தும் குகையில் இருந்தும் உற்பத்தியாகி பூர்வவாகினியாகவும் உத்தரவாகினியாகவும் வெகுதூரம் பாய்ந்து சென்று இறுதியில் திருச்செந்தூருக்கு வடதிசையில் மூன்று பாகமாக கடலில் கலக்கிறாள்.

    தாமிரபரணியின் இரண்டு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் குறிப்பாக நவகைலாயம், நவ திருப்பதி என போற்றப்படுகின்ற திருக்கோவில்கள் அமைந்து சிவ-விஷ்ணு ஒற்றுமையை பறைசாற்றுகின்றன.

    ஆழ்வார்திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணியின் புனித நீரால் உண்டாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×