search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் நல்லூர் கல்யாண சுந்தரர்
    X

    சுவாமி-அம்பாள், நல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் ராஜகோபுரம்.

    பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் நல்லூர் கல்யாண சுந்தரர்

    • சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில்.

    தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது.

    மகாமகம்

    சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறும். அப்போது நாடு முழுவதும் இருந்து மக்கள் அனைவரும் கும்பகோணத்துக்கு வந்து மகாமக குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.

    கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.

    மாடக்கோவில்

    நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில். யானை ஒன்று பெருமான்(மூலலிங்கம்) இருப்பிடத்தைச் சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார்.

    அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. இந்த பெரிய மாடக்கோவிலை திருஞானசம்பந்தர் 'மலை மல்கு கோவில் வானமருங்கோவில், வான் தேயும் கோவில் என பாடி உள்ளார். இரண்டு திருச்சுற்றுகளையுடைய இந்த கோவில் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.

    7 மாதர்கள்

    இந்த கோவிலின் முன்கோபுரத்தில் ஒரு மாடத்தில் அதிகாரநந்தி, பிள்ளையார் கொடி மரம், பலிபீடம், இடபதேவர் ஆகியவையும் சற்று தெற்கில் அமர்நீதி நாயனாரது வரலாற்றில் தொடர்புடைய 4 கால்களுடன் கூடிய அழகிய தராசுமண்டபமும் உள்ளன. தெற்கு வெளிச்சுற்றில் அஷ்டபுஜமாகாளி தேவியின் சன்னதி அமைந்துள்ளது.

    மாகாளி 8 கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலத்தில் உள்ளார். இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றால் இத்தலத்து விநாயகரான காசிப் பிள்ளையார் உள்ளார். தென்மேற்கு மூலையில் 7 மாதர்களாகிய அபிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியோருடன் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

    குந்தி தேவி

    உள்வடக்கு திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் பெருமானை வணங்கும் கோலத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவியும், அடுத்து இத்தலத்துக்கு வந்து முக்தி பெற்ற அமர்நீதியார் சிலை வடிவங்கள் உள்ளன. இவர்களுக்கு எதிரில் சண்டேஸ்வரர், துர்க்கை அம்மன் சன்னதிகள் உள்ளன.

    வடகிழக்கு மூலையில் நடராஜ பெருமானை அடுத்து சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன.

    5 நிறங்களில்....

    மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் 5 நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் என்றும், அகத்தியருக்கு தன் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் என்றும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.

    கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.

    7 கடல்கள்

    ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.

    இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தீர்த்தவாரி

    பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யஜுர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திருநல்லூர் கல்யாண சுந்தரப்பெருமானுக்கு மாசிமகம், வைகாசி விசாகம், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் இந்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

    நரசிம்ம வடிவம்

    கொடிய அரக்கனாகிய இரணியனை கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்துக்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியன் மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாக இருக்கவேண்டும் என்று பணித்தார். இந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்.

    பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

    இக்்கோவிலில் வைகாசி விசாக சப்தஸ்தான விழா, ஆனி மாதம் அமர்நீதியார் விழா, மார்கழி மாதம் 10 நாள் திருவெம்பாவை விழா, திருவாதிரை தரிசனம், மாசிமக விழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் ஆகும்.

    5 நிறங்களில் காட்சி அளிக்கும் கல்யாணசுந்தரர்

    நல்லூர் கல்யாண சுந்தரர் தினமும் 6 நாழிகைக்கு ஒரு தடவை பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறார். முதல் 6 நாழிகையில் தாமிர நிறத்திலும் அடுத்த 6 முதல் 12 நாழிகையில் இளஞ்சிவப்பு நிறத்திலும், அடுத்த 12 முதல் 18 நாழிகையில் தங்க நிறத்திலும், 18 முதல் 24 நாழிகையில் நவரத்தின பச்சை நிறத்திலும் அடுத்த 24 முதல் 30 நாழிகையில் என்ன நிறம் என்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் வழி

    தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.

    Next Story
    ×