search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ சாத்தாயி அம்மன் கோவில்
    X
    ஸ்ரீ சாத்தாயி அம்மன் கோவில்

    ஸ்ரீ சாத்தாயி அம்மன் கோவில்- நங்கைவரம்

    இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள்.
    அம்பாள் : ஸ்ரீ சாத்தாயி அம்மன்
    மூர்த்தி : கருப்புசாமி, விநாயகர், ஸ்ரீ பிராமி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ இந்திராணி.
    தலவிருட்சம் : ஆலமரம்.

    தலச்சிறப்பு : அன்னை சாத்தாயி அம்மனின் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மகாமண்டப திருப்பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக, சாமுண்டியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில், கருவறையில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வலது புறம் சாஸ்தாவும் இடது புறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள்.

    அன்னை தன் கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள். ஆம்! அன்னையின் விக்கிரகம் தேள் மாலையுடனேயே காணப்படுகிறது. பொதுவாக இந்த ஊரில் தேள் யாரையும் கடிப்பதில்லை என்றும், கண்ணில் படும் தேளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். தேள் கடித்தால் அன்னையின் குங்குமத்தையும், விபூதியையும் பூசினால் தேளின் விஷம் விரைவாக இறங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அன்னையின் இடது புறம் மலையாள கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. ஆதியில் பூமியில் கிடைத்த கருப்புசாமியின் விக்கிரகம் சேதமடைந்ததால், புதியதாக சுதையில் உருவான கருப்புசாமி சிலை தற்போது மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆதி கருப்புசாமியின் சிலை, அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தல வரலாறு : இந்த கோவில் ஏறத்தாழ 1000 வருடம் பழமையானது. களத்து மேடு ஊரின் மேல் திசையில் எட்டிய தொலைவு வரை நெல் விளையும் பூமிதான். இந்த வயல் வெளிகளுக்கு இடையே ஒரு ஆலமரம். அந்த இடம் வயல் வெளிகளை விட சற்றே உயரமாகக் காட்சி தரும். திடல் போல் அமைந்திருக்கும் அந்த இடம்தான் ஊரின் களத்து மேடு. வயலில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, கட்டு கட்டாகக் கட்டி, இந்தக் களத்துக்கு கொண்டு வருவார்கள். பின், அதனை சிறு கட்டுகளாக கட்டி தரையில் அடித்து நெல் மணிகளை உதிரச் செய்வார்கள். பிறகு அந்த நெல் குவியலைத் தூற்றி, சாக்கு மூட்டைகளில் கட்டி வண்டியில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். காலையில் தொடங்கும் இந்தப் பணி மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரை நீடிக்கும். ஊர்மக்கள் அனைவரும் பரந்து விரிந்து கிடந்த அந்த களத்து மேட்டையே பயன்படுத்துவார்கள்.

    அறுவடையான நெல்லை வீட்டிற்கு ஏற்றிச் சென்ற பின், சில பெண்கள் களத்து மேட்டில் நான்கு திசையிலும் சிதறிக் கிடக்கும் தானியத்தை கூட்டி ஒன்று சேர்த்து எடுத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான். ஒரு பெண்மணி சிதறிக் கிடந்த நெல்லை கூட்டிக் கொண்டிருந்தாள். களத்தின் நடுவே ஒரு சிறு பள்ளம். அதில் நிறைய நெல் மணிகள். அந்தப் பெண் குனிந்து அந்த நெல்லை கைகளால் அள்ள முற்பட்டாள். திடீரென ஒரு குரல் அசரீரியாய் ஒலித்தது. அந்தப் பெண் திடுக்கிட்டாள். பயந்து போய் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள். அம்மன் அசரீரி.. ‘பயப்படாதே!. நான் தான் சாத்தாயி பேசுகிறேன். ஆடி வெள்ளத்தில் கேரளாவில் இருந்து அடித்து வரப்பட்டு, இந்த களத்து மேட்டில் ஒதுங்கியிருக்கிறேன். என்னுடன் மலையாள கருப்புசாமியும் இருக்கிறார். எங்களுடன் என்னையும் சேர்த்து ஏழு பெண்கள் வந்தோம்’ என்று அந்தக் குரல் கூறியது. பதற்றம் அடைந்த அந்தப் பெண், "தாயே! நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.

    "எங்களுக்காக ஒரு கோவில் கட்டச்சொல். உலக்கை சப்தம் காதில் விழாத தொலைவில், ஊருக்கு வெளியே அந்தக் கோவில் இருக்க வேண்டும். நான் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவேன்" என்று கூறியதுடன் அந்த குரல் ஓய்ந்தது. பதற்றத்தில் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதே பயத்துடன் ஊருக்குள் ஓடிச் சென்று, ஊர் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினாள். ஊர் கூடியது மறுநாள் மேளதாளம், தாரை, தப்பட்டை முழங்க ஊர் மக்கள் அந்த களத்து மேட்டுக்குச் சென்றனர். சாத்தாயி அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தை கவனமாகத் தோண்டினர். அங்கே அழகான அம்மன் சிலை ஒன்று இருந்தது. கூடவே, கருப்புசாமி சிலையும் கிடைத்தது. அந்த அம்மனே சாத்தாயி அம்மன். ஊர் மக்கள் சிறு ஆலயம் கட்டி அங்கு அம்மனை பிரதிஷ்டை செய்தனர். கூடவே ஆறு அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருப்புசாமி என்ற மலையாள கருப்புசாமியை தனியாக பிரதிஷ்டை செய்தார்கள்.

    நடைதிறப்பு : காலை 6.00 முதல் இரவு 8.00 வரை.

    கோயில் முகவரி :
    ஸ்ரீ சாத்தாயி அம்மன் கோவில்,
    நங்கைவரம்,
    கரூர் மாவட்டம்.
    Next Story
    ×