search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்
    X
    ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்

    ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்- விருதுநகர்

    எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப்பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
    இறைவனே தேடி வந்து குடியிருக்கும் கிராமம்தான் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி என்ற சிறிய கிராமம். இக்கோவில் சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில், கழுகுமலை செல்லும் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. சிவகாசியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரமாகும்.

    பெயர்க்காரணம்

    150 ஆண்டுகளுக்கு முன்னர் முருகப்பெருமான் மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற பக்தருக்கு காட்சி கொடுத்து தான் வாழைமரத்தில் குடியிருப்பதாக கூறி அருள்பாலிப்பதால் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி எனஅழைக்கப்படுகிறது. துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வாழ்ந்த தேரியப்பர்-வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம்.

    இவர் தினமும் அதிகாலை வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்திலிங்காபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசித்துவிட்டு அன்றாட பணிகளை செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார். வைத்திய முறை தெரிந்து வைத்திருந்தார். அங்குள்ள மக்களுக்கு வைத்தியம் செய்வதற்கு பணம் வாங்குவதில்லை. தர்ம சிந்தனையுடன் வைத்தியத்தின் மூலம் நோய் நீக்கியதால் மக்கள் பக்தியை கண்டு சித்தர் என்று போற்றினார்கள்.

    வேலாயுதம் வழக்கம்போல் ஒருநாள் அதிகாலை எழுந்து வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு முருகனை தரிசனம் செய்ய செல்லும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றை கடக்க முடியாமல் போனது. அதனால் முருகனை தரிசிக்க முடியாமல் தன் இல்லம் வந்து விட்டார். அன்று முழுவதும் வேதனையுடன் இருந்தார்.

    இரவு முருகனின் திருநாமத்தை சொல்லியவாறு கண் அயர்ந்த போது கந்தன் கனவில் வந்து வேலாயுதா என்னை காண எங்கும் செல்ல வேண்டாம். நானே உன்னை தேடி வந்து விட்டேன். நீ ஆசையாக பராமரித்து வரும் வாழைத்தோட்டத்தில் ஒரே ஒரு குலை தள்ளிய வாழை மரத்தில் மட்டும் தான் இருப்பதாக சொல்லி மறைந்தார். மறுநாள் காலை வேளையிலும் குளித்து விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கி ஓடிச் சென்றார் மெய் மறந்து செய்வதறியாது திகைத்து நின்றார். காரணம் கனவில் முருகன் கூறிய படி குலையுடன் வாழை மரம் இருந்து அதிசயம் கண்டு மனமுருகி வேண்டி நின்றார். இச்செய்தி பரவியதால் வாழைமரத்தை பக்தர்கள் வழிபட்டனர்.

    ஒருமுறை செவல்பட்டி ஜமீன் அரண்மனையில் பிரதான கணக்கு பிள்ளையின் ஒரே மகனுக்கு திருமண விழாவுக்காக அந்த வாழை மரத்தை வெட்டி சென்றனர். ஆனால் வேலாயுதம் வாழைமரத்தை வெட்ட அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் மணமகன் தானே நேரில் சென்று வாழை மரத்தை வெட்டிக் கொண்டு வருவதாக கூறி தோட்டத்துக்கு சென்றார். அவரிடமும் வேலாயுதம் தான் வாழைமரம் தரமுடியாது என்று உறுதியாக கூறினார். ஆனால் வேலாயுதம் சொல்வதைக் கேட்காமல் தன் கையில் இருந்த அரிவாளால் மரத்தை ஓங்கி வெட்டினான்.

    அடுத்த கணம் வெட்டிய வாழையிலிருந்து ரத்தம் வெளியேறி நாகமாக மாறி மணமகனின் காலை தீண்டியது. சிறிது நேரத்தில் மணமகன் இறந்துவிட்டான். கணக்குப்பிள்ளை அழுது புரண்டார். தன் மகனை காப்பாற்றுமாறு வேலாயுதம் காலில் விழுந்து கெஞ்சினார். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று முருகனிடம் கேளுங்கள் என கூறினார். நீங்கள் நினைத்தால் காப்பற்றலாம் என வேண்டினார்கள். வேலாயுதம் தன் கையிலிருந்த பிரம்பால் இறந்த மணமகன் மீது முருகா.. முருகா... முருகா.. என 3 முறை திருநாமத்தை கூறிவிட்டார். உடனே ஒரு அதிசயம் நடந்தது,

    இறந்த மணமகன் உயிர் பெற்றான். இதை கண்ட ஜமீன்தார் இந்த இடத்தில் வாழைமர பாலசுப்ரமணியனுக்கு ஒரு கட்டிடம் அமைத்து கொடுத்தார். அதன்படி கோவில் அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேலாயுதம் ஆசி வழங்கினார். அருள்வாக்கு கூறி அனைவருக்கும் நன்மைகள் செய்து வந்தார். இவரது காலத்திற்கு பின்பு அவருடைய மகன் தேரியப்பர் கோவில் திருப்பணியை செய்து வந்தார். ஒருமுறை ஏற்பட்ட திடீர் புயல் மழை நாள் வெள்ளத்தால் கோவில் இடிந்து போனது. இடிந்துபோன கோவிலை புதுப்பிக்கும் வண்ணம் சிறிய அளவில் கோவில் கட்டப்பட்டது.

    தேரியப்பர் வாரிசுதாரர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகம் தோறும் பால்குடம் எடுத்து வழிபட்டு வருகின்றனர். வாயு மூளையில் உற்சவர் சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன் நின்ற நிலையில் இடது கையை தொடையில் வைத்தபடி வலது கையில் அபய முத்திரை பின்னர் வாழைமரம் இருக்குமாறு அற்புத வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப்பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

    இது திருமண தோஷம், புத்திர தோஷம் நோய்களை தீர்க்கும் நிவர்த்தி தலமாக அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் நோய்நொடி என்று பெருவாழ்வு வாழவும் சகல சவுபாக்கியம் உடன் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்ந்த ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம் வந்து வணங்கி வளமோடு வாழ்க என வாழ்த்துவோம்.

    Next Story
    ×