search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோவில்
    X
    மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோவில்

    மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோவில்- திருநாவலூர்

    பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
    விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால், விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது திருநாவலூர். அருள்மிகு மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் புண்ணிய க்ஷேத்திராம் இது!

    இறைவனின் தோழன் என்றே ஞானநூல்கள் பலவும் போற்றும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவதரித்த தலம், இந்தத் திருநாவலூர் என்கிறார்கள் பக்தர்கள்! இங்கே பக்தஜனேஸ்வரராக சிவம் கோயில் கொண்ட திருக்கதை அற்புதமானது.

    ஆலய வரலாறு

    1300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் என்கிறார்கள். ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயில் கடந்து உள்ளே நுழைந்தால், அழகும் அமைதியும் ததும்ப காட்சி தருகிறது ஆலயம். பிரமாண்டமான நந்தி சிவச் சந்நிதியை எதிர்நோக்கி அமர்ந்திருக்க, அருகிலுள்ள சிங்க மண்டபத்தை ஒட்டியபடி அம்பாள் சந்நிதிக்கான பாதை செல்கிறது.

    இதைக் கடந்ததும் உள் பிராகாரம். கிழக்குச் சுற்றில்- 16 பட்டைகளுடன் கூடிய நரசிங்க லிங்கம்; நரசிங்க முனையரையர் ஸ்தாபித்து வழிபட்டது. தெற்குச் சுற்றில்- பொள்ளாப் பிள்ளையார், சேக்கிழார், சைவ நால்வர், அறுபத்து மூவரும், தொகையடியார்களும். தொடர்ந்து சப்தமாதர்கள். தென்மேற்கு மூலையில்- வலம்புரி விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர், பன்னிரு கரங்களுடன் மயிலேறுநாதராக அருள்கிறார்.

    தொடர்ந்து நகர்ந்தால்... மேற்குச் சுற்றுத் திருமாளிகையில் முருகனுக்கு அருகில், விஷ்ணு சேவை சாதிக்கிறார். அடுத்து, கிருத யுக லிங்கம்; அதற்கும் அடுத்து, சண்டிகேஸ்வரர். தொடர்ந்து திரேதா யுக லிங்கம்; பிரம்மா; துவாபர யுக லிங்கம்; கலியுக லிங்கம்.

    வடமேற்கு மூலையில் தனிச் சந்நிதியில் கஜலட்சுமி. வடக்குச் சுற்றில் சப்தரிஷிகள் பிரதிஷ்டை செய்த சப்த லிங்கங்கள்; வெவ்வேறு அளவுகளில் பாணங்கள் மட்டும் உள்ளன. தொடர்ந்து வந்தால், நடராஜர் சந்நிதி. கிழக்குச் சுற்றில் திரும்பினால், நவக்கிரகங்கள்.

    அடுத்ததாக, அழகான ருத்திராட்ச விதானத்தின் கீழ் ஸ்ரீபார்கவலிங்கம்; சுக்கிரன் வழிபட்ட சிவலிங்கம் (பிருகு முனிவரின் மகன் என்பதால் பார்கவன் என்ற பெயரும் சுக்கிரனுக்கு உண்டு). அடுத்துள்ள இரண்டு சந்நிதிகளில் பைரவர் திருவுருவங்கள். அதனையும் அடுத்து, சூரியன் சந்நிதி. சுக்கிரனும் சூரியனும் இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி உய்வு பெற்றனர்.

    கருவறையில், ஸ்ரீபக்தஜனேஸ்வரர்; வட்ட வடிவ ஆவுடையார். கிழக்கு நோக்கிய லிங்கத்தின் பாணம் சற்றே உயரமானது. நாவலேசர், தொண்டர் நாயகர், மனோன்மணி நாயகர், விஷ்ணுபூஜிதர், சாம்புபுரேசர், சண்டேச அனுக்கிரஹர், கருடானுகிரஹர், விஷபாத விமோசனர், கபர்தீசர், ஞானாச்சார்யர் முதலான திருநாமங்கள் கல்வெட்டுகளிலும் வழக்கிலும் காணப்படுகின்றன.

    அம்பாள் சந்நிதியின் எதிரில் நந்தி. மகா மண்டபத்தில், ஒருபுறம் விநாயகர்; மறுபுறம் துர்கை. கருவறையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் மனோன்மணி அம்பிகை. இரண்டு கரங்களில் பாசம் மற்றும் அங்குசம்; மீதமிரு கரங்களில் அபயம் மற்றும் வரம் முத்திரைகள். நாவலாம்பிகை, சுந்தராம்பிகை ஆகிய திருநாமங்களும் இவளுக்கு உண்டு.

    சுக்கிரனின் தவத்தால் மகிழ்ந்து காட்சியளித்த சிவபெருமான், பூலோகத்தில் உள்ள பல தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து வரும்படி அவரைப் பணித்தாராம். அப்படி, சுக்கிரன் வழிபட்ட தலங்களில் முதன்மையானது திருநாவலூர் என்கிறார்கள். சுந்தரர் இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்று ஞான தீக்ஷை பெற்றதாகச் சொல்கிறார்கள்.

    பங்குனி மாத 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். அதேபோல், இந்தக் கோயிலில் கொடி மரத்தின் அருகே உள்ள சுந்தர கணபதிக்கு மஞ்சள் மாலை கட்டி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் ஆசையும் நிறைவேறும்.

    சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் விழாவில், பஞ்ச மூர்த்தி உற்சவம் நிகழும். சுந்தரர் அவர்களை வணங்கி வழிகாட்டிச் செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரருக்கு விசேஷ பூஜை நடைபெறும். ஆடிச் சுவாதி மிகவும் விசேஷம். நவராத்திரியும் சிறப்பாக நடைபெறுகிறது!.
    Next Story
    ×