search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்
    X
    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்

    பௌர்ணமியில் மும்மூர்த்திகலாகவும், முப்பெரும் தேவியராகவும் காட்சி தரும் ஒரே அற்புத திருத்தலம்

    கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வரலாற்று அற்புதங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.
    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் ஆனது விஜயநகர பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது கட்டப்பட்ட திருகோவில் ஆகும். கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்தது இக்கோவில்.  இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது.

    இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

    சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி தொடர்பான தோஷம் இருப்பவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள். ஆதிசங்கரர், பிரகாரத்தில் இருக்கிறார். சித்திரையில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இத்தலத்து விநாயகர் செல்வ விநாயகர் எனப்படுகிறார்.

    பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, பின்பு வீதியுலா செல்கின்றனர். இந்த ஒருநாளில் மட்டுமே மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்க முடியும். கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று  சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

    அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில்,அணையா நவசக்தி ஜோதி தீபம் அமைந்துள்ளது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கிற்கு மேளதாளத்துடன்,சுத்தமான நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடைபெறுகிறது. அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமியாக காட்சி தருகின்றனர்.

    மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம் என்பது மேலும் விசேஷம். இஙகுள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.

    இவருக்கு மாட்டுப்பொங்கலன்று விசேஷ பூஜை உண்டு. ஜுரகண்டேஸ்வரர் ஆகிய சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். நோய் நீக்குபவராக அருளுவதால் ஜுரகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, அவர்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி வணங்கும் வழக்கமும் இக்கோவிலில் இருக்கிறது.

    இவரை வேண்டி அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம், அம்பிகைக்கு காய்கறி, பழங்களால் அலங்கரிக்கும் சாகம்பரம் உற்சவமும் நடைபெறுகிறது. இவ்வேளையில் சிவன், அம்பிகையை தரிசித்தால் அன்னத்திற்கும், விளைபொருட்களுக்கும் குறையில்லாத நிலை ஏற்படும் என்பர்.

    சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடிவிட்டது.பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கத்தை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார்.

    பொம்மியும் பயபக்தியுடன் கோவில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு ஜலகண்டேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. வேலூரில் காசி பிரகாரத்தில் கங்கை நதி, கிணறு வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் சிவன்,கங்கா பாலாறு ஈஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார்.

    இவர் இந்த கிணற்றில் கிடைக்கப்பெற்ற மூர்த்தியாவார். கங்கை நதியே இங்கு பொங்கியதாகச் சொல்கிறார்கள். இந்த லிங்கம், சற்றே கூம்பு போல காட்சியளிக்கிறது. இந்த சிவனுக்கு பின்புறத்தில் பைரவர் இருக்கிறார்.

    இந்த கோவில் பராமரிப்பு பணிகளை தற்பொழுது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செய்துவருகின்றனர்.இக்கோவிலின் விமானம் ஆகமவிதிப்படி செய்யப்பட்டுள்ளது . இந்த விமானமானது பத்ம விமானம் என்று அழைக்கபடுகிறது .

    Next Story
    ×