search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில்
    X
    அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில்

    அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில்

    இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
    அரதைபெரும்பாழி கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன. இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் உச்சிக்கால (காலை 11 முதல் 12.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் வன்னி வனம் ஆகும்.

    திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார். அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரேயே பழமையான திருக்குளம். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஒரு மண்டபம். ஈசனுக்கும், அம்பாளும் தனித்தனி சந்நதிகள். ராஜகோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி.  வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருட்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும் ரகசியமாகும்.

    இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.

    சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் “ஹரித்துவார்” தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும். திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு சகஜமாக நிகழ்கிறது.

    கோயில் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். ராஜகோபுரத்தின் இடப்பக்கத்தில் உள்ள மண்டபத்தின் நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர் மற்றும் பைரவரை தரிசிக்கலாம். அதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடைப்பட்ட சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. அதேபோல மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது.
    Next Story
    ×