search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில்-திருமங்கலக்குடி
    X
    மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில்-திருமங்கலக்குடி

    மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில்-திருமங்கலக்குடி

    தஞ்சாவூர் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற 275 சிவாலங்களில், இது 38-வது திருத்தலம் ஆகும்.

    ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.

    முதலாம் குலோத்துங்கச் சோழனிடம் மந்திரியாக இருந்தவர் அலைவாணர். இவர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, மன்னனின் அனுமதியைப் பெறாமல், திருமங்கலக்குடியில் சிவன் கோவிலைக் கட்டினார். இதை அறிந்த மன்னன், மந்திரியை சிறைபிடித்து, சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார்.

    தன்னை சிரச்சேதம் செய்தாலும், உடலை திருமங்கலக்குடியிலேயே தகனம் செய்யும்படி மன்னனுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார், அலைவாணர். அதன்படி சிரச்சேதம் செய்யப்பட்ட அவரது உடல், திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மந்திரியின் மனைவி, தன் கணவர் கட்டமைத்த கோவிலில் வீற்றிருக்கும் அன்னையிடம் சென்று, தன் கணவரின் உயிரைத் திரும்பத் தருமாறு வேண்டினாள். அந்த நேரத்தில் அம்மன் கரு வறையில் இருந்து, “உன் வேண்டுதல் பலிக்கும்” என்று அசரீரி கேட்டது.

    அதன்படியே மந்திரியின் தலை ஒன்றிணைந்து, உயிர் வரப் பெற்றார். உயிர்பெற்றதும் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். மந்திரிக்கு உயிர் அளித்த காரணத்தால், இறைவன்- பிராணநாதேஸ்வரர் என்று திருநாமம் பெற்றார். மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதால், அம்பாள்- மங்காளம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.

    இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில், ஆவுடையார் பெரியதாகவும், பாணம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள பாணம் அதிக உயரம் கொண்டதாக காட்சி தருகிறது. இவரது சன்னிதிக்கு செல்லும் முன்பாக உள்ள மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும், துவார பாலகிகள் போல வீற்றிருக்கின்றனர். இருவரும் கால்களை மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதியின் கையில் வீணை காணப்படவில்லை.

    அம்பாள் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு அம்மன்தான், வரப்பிரசாதியாக திகழ்கிறாள். அவளது திருப்பெயரால்தான் ஆலயம் வழங்கப்படுகிறது. அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    பொதுவாக சிவன்- அம்பாள் இருக்கும் ஆலயங்களில் திருக்கல்யாணம் என்பது காலை வேளையில் நடைபெறும். மதியம் கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் இரவு வேளையில்தான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பங்குனியில் நடைபெறும் ஆலய பிரம்மோற்சவத்தின் போது, இந்த திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

    ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும், சிவபெருமானின் இரண்டு கண்களாக விளங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை இரண்டும், ஈசனை குளிர்விப்பதற்காகவே இங்கு தீர்த்தங்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தல இறைவனுக்கு இரண்டு தீர்த்தங்களின் நீரையும் சேர்த்துதான் அபிஷேகம் செய்கிறார்கள்.

    இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

    எருக்கு இலையில் தயிர் சாதம்

    நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

    நவக்கிரகங்களின் சாபம் போக்கிய ஈசன்

    ஒரு முறை காலமா முனிவருக்கு ஏற்படவிருந்த நோயை, நவக்கிரகங்கள் தங்களின் சக்தியைக் கொண்டு தடுத்தன. எனவே அந்த நோய், நவக்கிரகங்களைத் தாக்கும்படி பிரம்மதேவன் சாபம் கொடுத்தார். இதை யடுத்து நவக்கிரகங்கள் அனைவரும், இந்த திருத்தலம் வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து சாப விமோசனம் பெற்றனர். நவக்கிரகங் களின் சாபத்தைப் போக்கிய இறைவனாகவும், பிராணநாதேஸ்வரர் திகழ்கிறார். இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனிச் சன்னிதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் அருளும், சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. ஒரே ஆலயம்தான் இப்படி இரண்டாக பிரிந்திருப்பதாகவும், அதில் பிராணநாதேஸ்வரர் கோவில்தான் பிரதானமானது என்றும் சொல்லப்படுகிறது. பிராணநாதேஸ்வரரை வழிபட்ட பிறகுதான், சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.

    Next Story
    ×