என் மலர்

  ஆன்மிகம்

  திருப்புடைமருதூர் கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில்
  X
  திருப்புடைமருதூர் கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில்

  தித்திக்கும் வாழ்வுதரும் திருப்புடைமருதூர் கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
  நாறும்பூநாதர்
  ஆலயத் தோற்றம்
  கோமதி அம்பாள்

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது திருப்புடைமருதூர் திருத்தலம். இங்கு நாறும்பூநாதர் கோவில் அமைந்துள்ளது. இது அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிவாலயம் ஆகும்.

  மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள், ‘அர்ச்சுன தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. ‘அர்ச்சுனம்’ என்றால் ‘மருதமரம்’ என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் ‘தலையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். இது தேவார வைப்புத் தலம் ஆகும்.

  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், ‘இடையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

  தல வரலாறு

  வீரமார்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒரு முறை மருத வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது அவனது கண்ணில் ஒரு மான் தென்பட்டது. அந்த மானை நோக்கி மன்னன் அம்பு எய்தான். அந்த மான் அங்கிருந்த ஒரு மருத மரத்திற்குள் சென்று மறைந்தது.

  மன்னனும் அந்த மரத்தின் அருகில் சென்று, அதில் இருந்த பொந்துக்குள் உற்று நோக்கினான். அப்போது அதிசயிக்கும் விதமாக அந்த மான், சிவலிங்கமாக மாறி, இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் நாறும்பூநாதராக மன்னனுக்கு காட்சியளித்தது. இதையடுத்து வீரமார்த்தாண்டவர்மன், இந்தப் பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

  இந்த ஆலயத்தில் சிவபெருமான், ‘திருநாறும்பூநாதர்’ என்ற பெயரில் லிங்க உருவத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அம்பாளின் திருப்பெயர் ‘கோமதி.’ மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணைக் கொண்டவளாகவும் விளங்கும் இந்த அன்னை, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், இத்தல அம்பாள் தன்னுடைய உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத்தை தாங்கியபடி வீற்றிருப்பது விசேஷமான அமைப்பாகும். இது `தாரகா சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது.

  பெரும்பாலும் சிவாலயங்களில் சிவலிங்கம் தான் சுயம்புமூர்த்தியாக இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், சிவலிங்கம், அம்பாள் இருவருமே சுயம்பு மூர்த்தியாக இருப்பது அரிதிலும் அரிதான சிறப்புக்குரியது. காசியில் பாயும் கங்கையானது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாய்வதைப் போல, திருப்புடைமருதூரில் பாயும் தாமிரபரணியானது, தெற்கில் இருந்து வடக்காக பாய்கிறது. எனவே இந்த தலத்தை ‘தென்னக காசி’ என்றும் அழைக்கிறார்கள்.

  திருப்புடைமருதூர் திருக்கோவில் அமைந்த ஆற்றங்கரையில் உள்ள தீர்த்த கட்டத்திற்கு, ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும், அவனது மனைவி இந்திராணியும் இந்த இடத்தில் தவம் செய்து, தங்களுடைய தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்த கட்டத்தில் நீராடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

  ஐந்து நிலைகளையும், 11 கலசங்களையும் கொண்டதாக, இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் தளங்களில் ஏராளமான சுவர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், தசாவதாரம் போன்றவற்றின் காட்சிகளும், கோவில் தல வரலாறு குறித்த காட்சிகளும், சீன நாட்டு வணிகர்களின் வருகை பற்றிய தகவல்களும் வரையப்பட்டுள்ளன.

  இந்த ஆலயத்தில் கஜானன் மகராஜ் கைங்கர்ய சபா சார்பில், வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை), இந்த வருடத்தின் முதல் சனி மகாப் பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவோடு, ராஜகோபுரத்தின் திருப்பணியை மேற்கொள்வதற்கான வேண்டுதல் விழாவும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் ஆலயம் முழுவதும் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்படுகிறது.

  24-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த மகா பிரதோஷ பூஜையின் சிறப்பு அம்சமாக மூவாயிரத்து இருபத்து நான்கு செவ்விளநீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதோடு செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களைக் கொண்டு அலங்காரமும் செய்யப்படுகிறது.

  ஜாதகரீதியாக கெடுபலன் உள்ளவர்கள், இந்த பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால், அவர்கள் நிலை நல்லவிதமாக மாறும் என்பது ஐதீகம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்களை ஒரு பேப்பரில் எழுதி சமர்ப்பிக்கும் வகையில், பிரார்த்தனைப் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க, வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து திருப்புடைமருதூர் ஆலயத்திற்கு மதியம் 2 மணி முதல் பஸ்கள் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

  அமைவிடம்

  திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரவநல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம்.

  செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்

  திருப்புடைமருதூர் நாறும்பூநாதரை தரிசிப்பதற்காக, கருவூர் சித்தர் வந்தார். அப்போது தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவரால், ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் இருந்த இடத்திலேயே மனமுருக ஈசனை வேண்டினார். ஈசனை மனதில் நினைத்து பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலை ரசித்து கேட்க விரும்பிய ஈசன், தனது இடது காதில் கை வைத்து, ஒரு புறம் சாய்வாக திரும்பினார்.

  பின்னர் கருவூர் சித்தரிடம், “என்னை நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக” என்றார். கருவூராரும் அப்படியே செய்து, ஆற்றைக் கடந்து சிவனை தரிசித்தார். பின்னர் ஈசனிடம், “ஐயனே.. எக்காலத்திலும் இங்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனையை செவி சாய்த்து கேட்டு, அதனை நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதன்படியே இன்றளவும் இத்தல ஈசன், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கேட்க செவிசாய்த்தபடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
  Next Story
  ×