search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கபாலீஸ்வரர் கோவில்
    X
    கபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூரில் உள்ள சப்த சிவாலயங்கள்

    மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலோடு சேர்த்து, மல்லீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மொத்தம் 7 சிவாலயங்கள் உள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
    சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்த மயிலாப்பூர் பகுதி, முக்கியமான இடமாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பலரும் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் மட்டுமே இருப்பதாக எண்ணி, அதை மட்டுமே வழிபட்டுச் செல்வார்கள். ஆனால் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலோடு சேர்த்து, மல்லீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மொத்தம் 7 சிவாலயங்கள் உள்ளன. மயிலாப்பூரின் சப்த சிவாலயங்களாகத் திகழும் இவற்றை, சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். மேலும் மற்ற ஆறு சிவாலயங்களையும் தரிசித்தபிறகு, இறுதியாகவே கபாலீஸ்வரர் திருக்கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற வழிமுறையும் முன்னோர்களால் வகுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த 7 சிவாலயங்களையும் சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.

    காரணீஸ்வரர்

    சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூரில், கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்தல இறைவியின் நாமம், சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்திருப்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில், முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.

    தீர்த்தபாலீஸ்வரர்

    மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில், நடேசன் சாலை உள்ளது. இங்குதான், சப்த சிவாலயங்களில் 2-வதாக வழிபட வேண்டிய தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தீர்த்த நீராட்ட விழாவின்போது, சப்த சிவாலயங்களின் தெய்வங்களும் கடலில் இருந்து எழுந்தருள்வார்கள். அவர்களில் இத்தல இறைவனுக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். எனவேதான் இந்த இறைவனுக்கு ‘தீர்த்தபாலீஸ்வரர்’ என்று பெயர். முன் காலத்தில் இந்தக் கோவிலில் 64 வகையான தீர்த்தக் குளங்கள் இருந்திருக்கின்றன. சப்த சிவாலய தெய்வங்களும் கடல் நீராடுவதற்கு முன்பாக, இந்த தீர்த்தங்களில்தான் நீராடுவார்களாம். தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தங்களாக அவை கருதப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்தக் கோவிலில் அகத்திய முனிவரும், அத்ரி மகரிஷியும் வழிபாடு செய்திருக்கிறார்கள்.

    வெள்ளீஸ்வரர்

    மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார். அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி. உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு. இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

    விருபாட்சீஸ்வரர்

    மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில் 4-வதாக வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்குள்ள இறைவன்- விருபாட்சீஸ்வரர், இறைவி- விசாலாட்சி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பைரவர், சூரியனார் சன்னிதிகள், அம்பாள் சன்னிதி அருகிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது, அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவனை காட்டியருளி இருக்கிறார். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள். இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால், ஆத்ம பலம் அதிகரிக்கும்.

    வாலீஸ்வரர்

    மயிலாப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படுபவள், கோலவிழி அம்மன். இந்த அம்மன் கோவிலின் அருகில்தான், வாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இது சப்த சிவாலயங்களில் 5-வது தலம். கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆட்சி செய்ததாக கூறப்படும் வாலி என்னும் வானர அரசன் வழிபாடு செய்த தலம் இதுவாகும். இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே தான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ ஆனார். நிலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.

    மல்லீஸ்வரர்

    காரணீஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்திருக்கிறது, இந்தக் கோவில். சப்த சிவாலயங்களில் 6-வது தலம் இது. முன் காலத்தில் இந்தப் பகுதியில் மல்லிகைச் செடிகள் நிறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இங்கு கோவில் கொண்ட இறைவன் ‘மல்லீஸ்வரர்’ ஆனார். இறைவியின் திருநாமம், மரகதவல்லி என்பதாகும். பிருகு முனிவர் வழிபட்ட சிறப்புமிக்க தலம் இது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    கபாலீஸ்வரர்

    மயிலாப்பூரின் முக்கிய அடையாளமாகவும், சப்த சிவ தலங்களில் ஏழாவதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் இதுவாகும். இங்கு கற்பகாம்பிகை உடனாய கபாலீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயம் இது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற ஆலயமாகவும் இது திகழ்கிறது. ஈசன், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஆலயங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. புன்னை மரத்தின் அடியில் வீற்றிருந்த இறைவனை, பார்வதிதேவி மயில் வடிவில் வந்து வழிபட்ட தலம் என்பதால், இது ‘மயிலாப்பூர்’ என்று பெயர் பெற்றது. ஆதிகாலத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கியதாகவும், அதன் காரணமாக 350 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதைய இடத்தில் கபாலீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
    Next Story
    ×