search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகேஸ்வரர் திருக்கோவில்
    X
    நாகேஸ்வரர் திருக்கோவில்

    கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்

    ‘கும்பகோணம்’மகாமக உற்சவம் அன்று 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இவற்றில் 12 சிவாலயங்களில் 6 சிவாலயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
    தமிழ்நாட்டில் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது, ‘கும்பகோணம்’. இங்கு நடைபெறும் மகாமக உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இவற்றில் 12 சிவாலயங்களில் 6 சிவாலயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

    நாகேஸ்வரர்

    கும்பகோணத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, நாகேஸ்வரர் திருக்கோவில். பூமியைத் தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு, அதன் பாரத்தை தாங்கும் சக்தி இல்லாமல் போனது. இதனால் மகாவிஷ்ணுவை வணங்கிய ஆதிசேஷன், தனது இயலாமையை எடுத்துரைத்து, தொடர்ந்து பூமியைத் தாங்கும் சக்தியைத் தருமாறு வேண்டினார். அதற்கு மகாவிஷ்ணு, “நீ.. கும்பகோணம் சென்று அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக்கொண்டு அபிஷேகித்து நாகேஸ்வரரை வணங்கு. அதன் மூலம் பூமியைத் தாங்கும் வல்லமை உனக்குக் கிடைக்கும்” என்று அருளினார். அதன்படியே கும்பகோணம் வந்து நாகேஸ்வரரை வணங்கிய ஆதிசேஷன், பூமியைத் தாங்கும் முழு சக்தியையும் பெற்றார். இந்த ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இங்கு வடக்கு திசையில் சிவகாமி அம்மை சன்னிதியும், தென் திசையில் சிங்கமுக தீர்த்தமும் இருக்கின்றன.

    கோடீஸ்வரர்

    கும்பகோணத்தில் அமுத கலசத்தின் மீது அம்பு எய்தார், சிவபெருமான். அந்த கலசத்தில் இருந்து தெறித்த ஒரு துளி அமிர்தம், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் குளத்திற்குள் விழுந்தது. இதையடுத்து அந்த குளம், அமிர்தக் கிணறாக மாறியது. எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், இங்கு கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார். இங்குள்ள சிவலிங்கம், தன்னகத்தே, கோடி லிங்கங்களை அடக்கியதாக காட்சி தருகிறது. ஒரு முறை மத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண விரும்பினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும் தரிசிக்க வந்தார். அப்போது இத்தல இறைவன், தன்னுள் இருந்த கோடி சிவலிங்கத்தை முனிவருக்கு காட்டி அவருக்கு அருள்புரிந்தார். இங்குள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும் ‘கோடி’ என்ற அடைமொழியோடே அழைக்கப்படுகின்றன.

    அபிமுகேஸ்வரர்

    சிவபெருமான் வேடனின் உருவம் தாங்கி வந்து, அமுத குடத்தை அம்பு எய்து சிதைத்தபோது, அந்த குடத்தின் மேல் இருந்த தேங்காய் ஓரிடத்தில் போய் விழுந்தது. விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரமும், அதன் அடியில் ஒரு சிவலிங்கமும் தோன்றின. தேங்காய்க்கு, ‘நாளிகேரம்’ என்ற பெயர் உண்டு. தென்னை மரத்தின் அடியில் தோன்றியதால், இத்தல இறைவன் ‘நாளிகேசர்’ என்று அழைக்கப்பட்டார். இத்தல அம்பாளின் திருநாமம், ‘அமுதவல்லி’ என்பதாகும். ஒரு முறை மகாமக குளத்தில் நீராடுவதற்காக நவ கன்னியர்கள் வருகை தந்தனர். அவர்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக, கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த நாளிகேசர், மேற்கு நோக்கி திரும்பினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘அபிமுகேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அபிமுகம் என்றால் நேர்முகம் என்று பொருள்.

    காளகஸ்தீஸ்வரர்

    இந்தப் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி அருகே உள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்தான். ஆனால் நாம் பார்க்கப்போவது அதேபோன்று, கும்பகோணம் உப்பிலியப்பன் ஆலயம் அருகே அமைந்துள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருப்பதி அருகே உள்ள காளகஸ்தியில் செய்ய வேண்டிய பரிகார பூஜைகளை, அங்கே செல்ல முடியா தவர்கள், இந்த ஆலயத்தில் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயம் வந்து, இத்தல இறைவனை வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். இங்குள்ள துர்க்கை அம்மனை வேண்டினால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம்கார வடிவில் அமைந்துள்ள அம்மனின் பிரகாரத்தில் உள்ள மணியை அடித்தால், ‘ஓம்’ என்ற நாதம் ஒலிப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்.

    அமிர்தகலசநாதர்

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார். எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.

    ஏகாம்பரேஸ்வரர்

    கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவருடன், காமாட்சி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதியின் இருபுறமும் தீட்டப்பட்டுள்ள காயத்ரி தேவியின் திருவுருவமும், காமாட்சி அம்மனின் ஒவியமும் காண்போரை கொள்ளைகொள்வதாக அமைந்துள்ளன. ஏகாம்பரேஸ்வரர், காளியம்மன் மற்றும் நவக்கிரகங் களுக்கு தனித்தனியாக சன்னிதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள காளிகாபரமேஸ்வரி என்னும் ராகுகால அம்மன், அசுரனை சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள். பொதுவாக துர்க்கை அம்மனுக்குத்தான் ராகுகால வழிபாடு நடத்தப்படும். ஆனால் இங்கு, காளிகாபரமேஸ்வரி அம்மனுக்கு ராகுகால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
    Next Story
    ×