search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்
    X
    திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

    காசிக்கு நிகரான புண்ணியத்தை தேடித்தரும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

    நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர்:    சுவேதாரண்யேஸ்வரர்
    தாயார்:    பிரமவித்யாம்பிகை
    தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
    தீர்த்தம்:  முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
    மாவட்டம்:    மயிலாடுதுறை

    நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. கல்விக்கும், தொழிலுக்கும், அதிபதியாக இருக்கும் புதன் பகவானுக்கு, இத்தலத்தில் தனி ஆலயம் உண்டு. அதுமட்டுமல்லாமல் காசிக்கு நிகரான புண்ணியத்தை தேடித்தரும் கோவில் என்ற பெருமையும் இந்த ஆலயத்திற்கு இருக்கிறது. இந்தக் கோவிலில் இருக்கும் ருத்ர பாதத்தினை வழிபட்டால் 21 தலைமுறையினர் செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். காசியில் விஷ்ணு பாதம். திருவெண்காட்டில் ருத்ர பாதம்.

    காசியில் இருக்கும் விஷ்ணு பாதத்தை வழிபட்டால் கிடைக்கும் பலனைவிட, திருவெண்காட்டில் இருக்கும் ருத்ர பாதத்தை வழிபட்டால் மூன்று மடங்கு அதிகப்படியான புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும். இதனால்தான் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானுக்கு, 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த முறைப்படி புதன் பகவானுக்கு இத்திருத்தலத்தில் தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை, தீராத நோய் தீர, குழந்தை வரம் பெற, திருமண யோகம் வர, தீராத பாவங்கள் தீர இத்திருத்தலத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு 17 தீபங்களை ஏற்றினாலே போதும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்லாமல், இத்தளத்தில் ஹோமம் நடத்தினால், நம்மைப் பிடித்திருக்கும் பில்லி, ஏவல், சூனியம் போன்ற கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் அனைத்தும் விலகிவிடும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். குறிப்பாக குடும்பப் பிரச்சினை தீர்வதற்கு இத்திருத்தலத்தில் இருக்கும் அகோர மூர்த்தியை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    சிலபேருக்கு இத்திருத்தலத்திற்கு சென்று புதன் பகவானுக்கு தீபம் ஏற்றினால் யோகம் வரும் என்று தெரிந்திருக்கும். இதைத் தெரிந்து, இந்த கோவிலுக்கு செல்பவர்கள், நேராக புதன் பகவானை தரிசனம் செய்ய சென்று விடுவார்கள். ஆனால், இது மிகப்பெரிய தவறு. முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரையும் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, இறுதியாகத் தான் புதன் பகவானை வழிபட்டு 17 தீபங்கள் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல வேண்டும்.

    தல வரலாறு

    பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.

    சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

    சிறப்புகள்

    * புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
    * சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
    * படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

    Next Story
    ×