search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாலமுருகன், கால பைரவர், ஆலய தோற்றம்
    X
    பாலமுருகன், கால பைரவர், ஆலய தோற்றம்

    திருமண வரம் அருளும் தாண்டிக்குடி முருகன் கோவில்

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ளது தாண்டிக்குடி முருகன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சான்றோர் வாக்கு. ஒரு அழகான மலையின் மீது பல சிறப்புகளோடு குமரக்கடவுள் காட்சி தரும் ஒரு அற்புதமான ஆலயம்தான், தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோவில். இது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ளது.

    தமிழ் கடவுளான முருகக் கடவுள், தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி என்ற இந்தப் பகுதிக்கு வந்தார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரான இடும்பன், கயிலாயத்தில் இருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரண்டு மலைகளை சுமந்துகொண்டு பழனி வந்து சேர்ந்தார். இதையறிந்த முருகப்பெருமான், அந்த இரண்டு மலைகளில் ஒன்று, தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி தாண்டிக் குதித்தார். இதன் காரணமாகவே இந்த இடம் `தாண்டிக்குதி' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி `தாண்டிக்குடி' ஆனது.

    பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி, முருகப்பெருமானே இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான பொருட்களை வழங்க, சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி கொடுக்கக் கூறினார். தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை கூட, ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்றதுதான். திருப்பணி வேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது என்ற தகவலும் இங்கே கூறப்படுகிறது.

    இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது. பழனி மலை முருகன் சிலையில் இருக்கும் அத்தனை அம்சங்களும் அப்படியே இந்த சிலையில் இருப்பதால், இத்தல முருகனையும், `பழனி முருகன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

    ஆலய அமைப்பு

    கொடைக்கானல் செல்லும் பாதையில் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மலைக்கிராமமான தாண்டிக்குடி. இந்த மலைக்கிராமத்தின் மலையின் உச்சியில் உள்ளது, தாண்டிக்குடி பாலமுருகன் ஆலயம். தாண்டிக்குடி கிராமத்தில் இருந்து கோவிலை சென்றடைய மூன்று கிலோமீட்டர் அழகான மலைப் பாதையில் பயணம் செய்தால், பாலமுருகன் ஆலயத்தை அடைந்து விடலாம். மலையின் உச்சியில் இப்படி ஒரு அற்புதமான ஆலயமா எனப் பிரமித்து மெய்சிலிர்த்துப் போகும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம்.

    தாண்டிக்குடி செல்லும் வழிநெடுகிலும் ஒரு தெய்வீகத் தன்மை காணப்படுகிறது. நம்மையும் அறியாமல் அந்த தெய்வீகத்தன்மை அந்த முருகன் கோவிலுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்.

    ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக உள்ள அலங்கார வளைவில் ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமானின் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றிலும் மரங்களும், புல்வெளிகளும் சூழ்ந்து நம் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. முதலில் நமக்கு தரிசனம் தருவது விநாயகப்பெருமான். அவரை தரிசனம் செய்து விட்டு நேராக சென்றால், அழகிய கொடி மரம், பலிபீடம், விநாயகர் உள்ளனர்.

    அடுத்ததாக மகா மண்டபத்திற்குள் பிரமாண்டமான மயில் வாகனம், கருவறையில் இருக்கும் முருகப்பெருமானை நோக்கி உள்ளது. அர்த்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது. அதற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மகா மண்டபத்தில் இருந்துதான் முருகப்பெருமானை தரிசனம் செய்ய முடியும். கருவறையில் முருகப் பெருமான், ராஜ அலங்காரத்தில் கையில் வேலோடு அற்புதமாக காட்சி தருகிறார். சண்முக கடவுளை மனதார வணங்கி விட்டு கோவிலை சுற்றி வந்தால், இடும்பன், பைரவர், நாகராஜர், நவக்கிரக சன்னிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.

    இக்கோவிலில் மாதம் தோறும் வரும் கிருத்திகை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. உற்சவர் சிலையை தேரில் வைத்து கோவிலை சுற்றி வந்து சிறப்பு பூஜை செய்கிறார்கள். ஆலயத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்தக் கோவில் இருக்கும் குன்றின் மேலே நின்று, கீழே அடிவாரத்தில் இருக்கும் தாண்டிக்குடி கிராமத்தைப் பார்த்தால் முருகப்பெருமானின் வாகனமான மயிலின் வடிவத்தில் இருப்பது மெய்சிலிர்ப்பை உண்டாக்குகிறது. இந்த ஆலயத்தில் உள்ள பாலமுருகனிடம் மன முருகி வேண்டி, அது நடந்துவிட்டால் கோவிலுக்கு திருப்பணி செய்ய உதவுவதை பக்தர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். காலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்படும். பிற்பகலில் பலவிதமான காவடிகள், கோவிலின் அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்திற்குச் சென்று வரும். திரு மணத்தடை உள்ளவர்கள், இங்கிருக்கும் காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 27 மிளகை ஒரு அகல் விளக்கில் வைத்து அதில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 11 வாரங்கள் செய்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆலயத்தை கட்டிய பன்றிமலை சுவாமி களுக்கு இந்த ஆலய வளாகத்துக்குள்ளேயே தனியாக ஒரு ஆலயம் உள்ளது. இங்கும் தினமும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. இங்கும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்.

    மலை உச்சியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த அற்புத ஆலயத்தை அடைவது மிகவும் கடினம் என்பதால், அங்கு செல்ல முருகப்பெருமானின் பரிபூரண அருள் நமக்கு மிகவும் அவசியம். அதனால்தான் மலை அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள மக்கள் மேலே வந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆலயத்தில் ஓர் மணி கட்டப்பட்டுள்ளது. இறைவனுக்கு பூஜை செய்யப்படும்போது ஒலிக்கப்படும் இந்த மணி, அடிவாரம் வரையிலும் நன்றாக கேட்கும். அப்போது கிராம மக்கள் அங்கிருந்தபடியே முருகப்பெருமானை நினைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள்.

    மலை கிராமம் என்பதால் போக்குவரத்து வசதி மிக குறைவுதான். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து தாண்டிக்குடி கிராமத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும் அங்கிருந்து மலைமீதுள்ள ஆலயம் செல்ல வாடகை வாகனங்களைதான் அமர்த்த வேண்டும்.

    கோவிலின் சிறப்பம்சங்கள்

    கோவிலின் அருகில் வலதுபுறம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும், மலைப் பாறை ஒன்று உள்ளது. பழனி திருத்தலத்தை நோக்கி இருக்கும் அந்த பாறையில் கால் தடம் ஒன்று காணப்படுகிறது. அது முருகப்பெருமானின் கால் தடம் என்கிறார்கள். இங் கிருந்துதான் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பழனி மலைக்கு முருகப்பெருமான் தாண்டிச் சென்றதாகவும், அதில் ஏற்பட்ட கால் தடம்தான் இது என்று கூறப்படுகிறது.

    அதே போல் இந்தப் பாறையில் ஒரு வேலின் தோற்றம், மயிலின் தோற்றம், அனுமனின் தோற்றம், பாம்பின் தோற்றம் ஆகியவை காணப்படுகின்றன. அதை விட சிறப்பு, இங்குள்ள பாறையின் மீது எந்நாளும் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. சுனையில் ஒரு வேல் நடப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தச் சுனை நீரை எடுத்துச் சென்று சுவாமியின் திருவடியில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் தரப்படும் விபூதி மற்றும் சந்தனத்தை அந்த நீரில் கலந்து அருந்தினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    பொ.பாலாஜிகணேஷ்

    Next Story
    ×