search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாஸ்தா, கோவில் தோற்றம்
    X
    சாஸ்தா, கோவில் தோற்றம்

    பெண்களின் சபரிமலை பெருநாடு சாஸ்தா கோவில்

    கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது, பெருநாடு என்ற பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் காக்காட்டு கோயிக்கால் தரும சாஸ்தா கோவில் ‘பெண்களின் சபரிமலை’ என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது.
    கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது, பெருநாடு என்ற பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் காக்காட்டு கோயிக்கால் தரும சாஸ்தா கோவில் ‘பெண்களின் சபரிமலை’ என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது.

    தல வரலாறு

    பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. ஒரு முறை மன்னன் காட்டிற்குச் சென்றபோது, அங்கு கிடைத்த ஒரு குழந்தையை எடுத்து வந்து ராணியிடம் கொடுத்து வளர்த்து வந்தான். ராணியும் அவனுக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு, அவன் மீது அன்பு காட்டி வளர்த்து வந்தாள்.

    இந்த நிலையில் ராணிக்கு, ராஜராஜன் என்றொரு மகன் பிறந்தான். அதன் பிறகு, ராணியின் மனம் மாறத் தொடங்கியது. தான் பெற்றக் குழந்தையை முதன்மைப்படுத்த விரும்பிய அவள், வளர்த்து வந்த மணிகண்டனை வெறுத்து ஒதுக்கத் தொடங்கினாள். மந்திரி ஒருவர் துணையுடன் மணிகண்டனை அழிக்கவும் சதித்திட்டம் தீட்டினாள்.

    அந்தச் சதித்திட்டத்தின்படி, தனக்குத் தீராத தலைவலி இருப்பதாகச் சொல்லி, அதனைத் தீர்க்கப் புலிப்பாலைக் கொண்டு வர வேண்டும் என்று அரண்மனை வைத்தியர் மூலமாகச் சொல்ல வைத்தாள், ராணி. அரண்மனையில் இருந்த படைவீரர்கள் பலரும் காட்டிற்குள் சென்று, புலியின் பாலைக் கறந்து வர முடியாது என்று மறுத்து விட்டனர்.

    இந்நிலையில் ராணி எதிர்பார்த்தபடி, புலிப்பால் கொண்டு வருவதாகச் சொல்லித் தன்னுடன் சில படைவீரர்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான், மணிகண்டன். காட்டில் அவனை வழிமறித்தாள், மகிஷி என்னும் அரக்கி. மகிஷி யுடன் சண்டையிட்டு அவளைக் கொன்றான், மணிகண்டன். இதையடுத்து மணிகண்டன் இந்த பூமியில் அவதரித்ததற்கான நோக்கம் நிறைவேறியது. தேவர்களையும், முனிவர்களையும் தன்னுடைய அசுர பலத்தால் துன்புறுத்தி வந்த, மகிஷி இறந்தது பற்றி அறிந்ததும், தேவர்களும், முனிவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஈசனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த அந்த மணிகண்டனை அனைவரும் வாழ்த்தினர்.

    அதன் பின்னர், தேவலோகத்தின் தலைவனான இந்திரன், புலி உருவெடுத்தான். அந்தப் புலியின் மேல் அமர்ந்த மணிகண்டன், காட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பினார். அந்தப் புலியின் பின்னால், தேவலோகத்தினர் சிலர் புலிகளாக மாறி உடன் வந்தனர். காட்டிற்குள் சென்ற மணிகண்டன், பல புலிகளுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் ஒதுங்கி ஓடினர். அரண்மனையில் உள்ளவர்களுக்கு இதுபற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது.

    இதையறிந்த ராணி பதறிப்போனாள். தான் செய்த தவறை உணர்ந்து, மணிகண்டனிடம் மன்னிப்பு வேண்டினாள். அதற்கு மணிகண்டன், ‘எனது அவதாரத்தின் நோக்கமே, அரக்கியான மகிஷியை வதம் செய்வதுதான். அந்த நோக்கம் நீங்கள் புலிப்பால் கேட்டதன் காரணமாகத்தான் நிகழ்ந்தது. அதனால்தான் என்னால் காட்டிற்குள் சென்று, மகிஷியைக் கொல்ல முடிந்தது. எனவே என்னை காட்டிற்கு அனுப்பியதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை’ என்று ஆறுதல்படுத்தினார்.

    அதன் பிறகு மணிகண்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி, தேவலோகம் செல்லப் போவதாகச் சொன்னார். அதனைக் கேட்ட மன்னர் ராஜசேகரும், ராணியும் வருத்தமடைந்தனர். அவர்கள் வருத்தத்தைக் கண்ட மணிகண்டன் தனது தந்தையிடம், அம்பு ஒன்றை எய்வதாகவும், அந்த அம்பு விழும் இடத்தில் தனக்குக் கோவில் ஒன்றைக் கட்டும்படியும் கூறினார். அந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் வந்து வழிபடும்படியும், அப்போது தான் ஜோதி வடிவில் காட்சி தருவதாகவும் சொன்னார்.

    அதன்படி, மணிகண்டன் எய்த அம்பு, சபரிமலையில் போய் விழுந்தது. பந்தள மன்னன் ராஜசேகரனும், அவனது படை வீரர்களும் பெருநாட்டில் தங்கியிருந்து சபரிமலையில் கோவில் கட்டும் பணிகளை மேற்கொண்டனர். கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்பு பந்தள மன்னன், மணிகண்டன் தெரிவித்தபடி, மகர சங்கராந்தி நாளில் சபரிமலை சென்று மணிகண்டனை வழிபட்டான்.

    மன்னன் ராஜசேகரன் சபரிமலை செல்லும் போது, ராணியும் மற்ற பெண்களும் பெருநாட்டில் தங்கி அங்கே ஓரிடத்தில் மணிகண்டனை நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், மன்னர் பெருநாட்டில் ராணியும் மற்ற பெண்களும் வழிபட்ட இடத்தில் இந்த சாஸ்தா கோவிலைக் கட்டினார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு தெரிவிக்கிறது.

    சபரிமலை ஆரணத்திற்கு பூஜை

    சபரிமலை சாஸ்தாவிற்கு அணிவிப்பதற்காக ஆரணமுளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள், மூன்றாம் நாளில் பெருநாடு சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் சபரிமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மண்டல பூஜை நிறைவு நாளில் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள் சபரி மலையில் இருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பின்னர் மகர ஜோதி நிறைவுக்குப் பின்னர், அந்த தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள் பெருநாடு கொண்டு வரப்பட்டு, அங்கிருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பெற்றுச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவ்விழாவில் பந்தள மன்னரின் மரபுரிமையர் மற்றும் பெண்கள் பலரும் பங்கேற்று சாஸ்தாவை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலைப் ‘பெண்களின் சபரிமலை’ என்று பெருமையாகச் சொல்கின்றனர்.

    கோவில் அமைப்பு


    பெருநாட்டில் அமைந்திருக்கும் இந்த சாஸ்தா கோவிலை, ‘காக்காட்டுக் கோயிக்கல் சாஸ்தா கோவில்’ என்றும், ‘வாளியக் கோவில்’ என்றும் சொல்கின்றனர். இந்த ஆலயமானது, கேரளக் கட்டுமானத்தில் அமைந்த மிகவும் பழமையான கோவிலாக இருக்கிறது. இங்கிருக்கும் சாஸ்தா அமர்ந்த நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இக்கோவிலில் சித்திரை விசு, மண்டல வழிபாட்டு நாட்கள் உள்ளிட்ட ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது.

    அமைவிடம்

    கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், ராணி வட்டத்தில் அமைந்திருக்கும் பெருநாடு சாஸ்தா கோவில், பத்தினம்திட்டாவில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ராணியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோவிலுக்குச் செல்ல பத்தினம்திட்டா, ராணி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    தேனி மு.சுப்பிரமணி
    Next Story
    ×