search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபா
    X
    சாய்பாபா

    விநாயகர் கனவில் வந்து சொன்னதால் உருவான பாபா ஆலயம்

    கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் அருள்மிகு தர்ம்சவர்த்தினி உடனுறை கம்பகேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து சுமார் 2 பர்லாங்தூரத்தில் எழுந்தருளி இருக்கும் சீரடி சாயிநாதர் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
    கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் அருள்மிகு தர்ம்சவர்த்தினி உடனுறை கம்பகேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து சுமார் 2 பர்லாங் தூரத்தில் எழுந்தருளி இருக்கும் சீரடி சாயி நாதர் பற்றிதான் பார்க்கப்போகிறோம். வினைதீர்க்கும் கணேசர் தமது பக்தன் கணேசன் கனவில் தோன்றி பாபா சிலையையும் நிறுவச் சொல்லியது விசேஷமானதாகும்.

    கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையம் பேட்டை வடக்கு தெருவில் வசித்து வந்த ரெங்கராஜன்ராஜாத்தி தம்பதிகளுக்கு தலைமகனாக பிறந்தவர் கணேசன். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டது. அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    சில வருடகாலம் அப்படி வேலை பார்த்து வரும் போது ஒருநாள் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து ஒன்றில் தனது வலது கையில் முட்டி வரை உள்ள பகுதியை இழந்தார். அதனால் அவரின் தினசரி வருமானம் தடைப்பட்டது. குடும்பத்தில் இருந்து விலக்கப்பட்டு தனி ஆளாய் நின்றார். அதன் பின்னர் சாய்பாபாவின் அருளால் பெட்டிக்கடை ஒன்று வைத்து தனது வாழ்க்கையை தொடர்ந்தார். அந்த காலகட்டத்தில் (1994ல்) ஏழை பெண் ஒருவரை திருமணம் செய்தார்.

    இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இப்படி இனிமையாக சென்ற இவரின் வாழ்க்கையில் மீண்டும் துயரம் துரத்தியது. வருமானம் போதுமானதாக இல்லை என்று அவர் மனைவி அதிருப்தி அடைந்தார். கருத்து வேறுபாடு காரணத்தினால் இவரின் மனைவி தங்களின் குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்தார்.

    அதன் பிறகு தனது வாழ்க்கை பயணத்தில் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் (சரபர் தலம்) ஆலயத்தின் அருகிலுள்ள குருநாதன் குட்டை குப்பை மேட்டில் இருக்கும் அருள்மிகு விநாயகர் பெருமானும் தன் மனதில் மங்கா ஒளிவீசி தன்னை வழி நடத்திச் செல்லும் சாய்பாபாவும் தான் தனக்கு நல்லருள் புரிய வேண்டும் என்று நினைத்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

    அந்த சமயம் பாபாவின் அருள் கொடையாக கணேசனின் நிலையை கண்டு உதவிகரமாக இருக்க 2007ல் இவரின் வாழ்க்கை துணைவியாக வாழ வந்தார் செல்வி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இப்போது இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகனும், சுமித்திரா என்ற மகளும் உள்ளார்கள்.

    இப்படி பல போராட்டக்களங்களை சந்தித்து வந்த கணேசன் திருப்புவனம் தென்றல் நகரில் குருநாதன் குட்டை குப்பை மேடு பகுதியில் தான் வசிக்க இடம் ஒன்றை வாங்கினார். அதில் விரைவாக வீடு கட்டி முடிக்க வேண்டும் என்றும் விநாயகருக்கும் கோயில் கட்ட அருள வேண்டும் என்றும் குப்பைமேடு விநாயகரிடம் மனமுருக வேண்டிக் கொண்டார்.

    விநாயகரும் அவர் நினைத்த வண்ணம் அனைத்து கட்டிட வேலைகளையும் 72 தினங்களில் சிறப்பாக முடித்து வைத்தார். அதன் பின்னர் அவரது வீட்டின் ஒரு பகுதியில் குப்பை மேட்டில் இருந்த வெற்றி விநாயக பெருமானுக்கு திருக்கோயிலும் 60 தினங்களில் கட்டப்பட்டு 15.3.2013 அன்று கும்பாபிஷேக விழாவும் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

    இந்த நிலையில் ஒருநாள் கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் புறப்பகுதியான சென்னை சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கினார். அதில் அவரின் இரு சக்கர வாகனம் தூள் தூளாகி விட இவர் மட்டும் இறை அருளால் துளியும் காயமின்றி தப்பினார். விநாயகருக்கு தமது உயிரை காப்பற்றிக் கொடுத்தமைக்கு நன்றி செலுத்தி, ஒரு வேளை தனது உயிர் விபத்தில் பிரிந்திருந்தால் பிற்காலத்தில் உம்மை யார் கவனித்துக் கொள்வார்கள் என விநாயகரிடம் மனமுருகி பணிந்து வணங்கியுள்ளார். இரவில் அவர் கனவில் தோன்றிய விநாயகர் உன்னையும் என்னையும் இனி கவனித்துக் கொள்ள இந்தக் கோவிலில் நீ சீரடி சாய்பாபாவையும் பிரதிஷ்டை செய் என அருளியுள்ளார். கணேசன் இதுவரை சீரடி சென்றதில்லை. சீரடி சாய்பாபா பற்றியும் அறிந்திருக்கவில்லை. உடனே அதுபற்றி தெரிந்தவர்களை அணுகி சீரடி சாய்பாபாவுக்கு கோவில் கட்டுவது பற்றி விபரம் கேட்டுள்ளார்.

    சாய்பாபா

    இவரின் பிரார்த்தனை பயனாக சாய் பக்தர் ஒருவர் இவரிடம் கும்பகோணத்தில் பிரஸ் வைத்திருக்கும் ஜெயராமனை சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி கணேசன் உடனே அவரை சந்தித்து பேசினார். தான் கண்ட கனவை பற்றி கூறி அதற்கான வழி முறைகளை கேட்டார். அதன் பின் அவரின் ஆலோசனையின்படி பல பொருளாதார நெருக்கடியிலும் பாபாவின் அருளினாலும், சாய் அன்பர்களின் அன்பினாலும் (105 தினங்களில்) 12.3.2015 அன்று சீரடி சாய்பாபா சன்னதி கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

    அதன் பின் 13.3.2016 அன்று துனி நிறுவுதல் விழாவும் நடைபெற்றது இவ்விரு விழாவிலும் சீரடியில் 20 வருடங்களாக வசித்து வரும் மகான். அச்சுதானந்தசாமி எந்த அழைப்பும் இன்றி தாமாகவே வந்து விழாக்களில் கலந்து கொண்டு சாய் பக்தர்களுக்கு உதியை வழங்கியது வியப்புக்குரியதாகும்.

    தனது வாழ்வில் ஏற்பட்ட பலவித இன்னல்களில் இருந்து காத்து வரும் குருநாதன் குட்டை குப்பை மேடு அருள்மிகு வெற்றி விநாயகர், அருள்மிகு ராமபக்தன் ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி, அருள்மிகு சீரடி சாய்பாபா ஆகிய இறை வடிவங்களுக்கு கணேசன் தினசரி பூஜை தனது இடது கரத்தால் தான் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக இவரின் மனைவி செல்வி துணை புரிகிறார். இங்கு இறை மூர்த்திகள் தனி தனி சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    வருடத்தில் ஒருமுறை நடைபெறும் விழாக்கள் விபரம்: சம்வத்ஸரா விழா, விநாயகர்சதுர்த்தி விழா, குருபூர்ணிமா விழா, சங்காபிஷேகவிழா, லட்சார்ச்சனை விழா, குத்துவிளக்கு பூஜை விழா, மகாசமாதி விஜயதசமி விழா, மடிபிச்சை எடுக்கும் விழா இவை தவிர மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று ஸ்ரீசத்யநாராயண பூஜை மற்றும் தினசரி பூஜைகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    திருமணம் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து மனம் உருகி சாய்பாபாவிடம் வழிபாடு செய்து வந்தால் நல்லது நடக்கும் என்பது இங்கு வழிபட்டு பேறுபெற்றவர்களின் நம்பிக்கையாகும்.

    “கடவுளும் மனிதனும் வேறல்ல உனக்கும் எனக்கும் நடுவே உள்ள சுவற்றை உடைத்துவிடு. என்னை நீ உன்னுள் உணர்வாய்” என்ற பாபாவின் வாக்குபடி இவரது வீடும் கோவிலும் ஒன்றாகவே உள்ளது மிகவும் சிறப்பானது.

    செல்வி கணேசன் எனும் இவரது துணைவியார் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து குளித்து நைவேத்தியம் தயாரிக்க, கணேசன் குளித்து தாமே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் பாபாவிற்கு அபிஷேகம், அலங்காரம் ஆரத்தி செய்கிறார். முதலில் இவரிடம் இருந்து இடக்கை மூலமாக பாபாவின் உதி பெறத் தயங்கிய மக்கள், இவரது விடாமுயற்சி, ஈடுபாடு ஆகியவற்றைக்கண்டு தற்பொழுது ஆர்வத்துடன் பாபா கோவிலுக்கு வருகின்றனர்.

    இவர் ராம நவமி, தத்திஜெயந்தி, பாபா மகா சமாதி அடைந்த விஜயதசமி திருநாள் போன்ற அனைத்து விழாக்களையும் தனது பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல் மனந்தளராமல் சிறப்பாக நடத்தி வருகிறார்.

    மேலும் ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் திருமணம் நடத்த மண்டபம் கட்ட வேண்டி கோவிலுக்கு அருகிலேயே மனை வாங்கியுள்ளார். பாபா கோவிலை மேலும் விரிவுபடுத்தவும், பெரிய மூர்த்தி, தியான மண்டபம் போன்றவற்றை கட்டவும் கோவிலுக்கு பின்னால் மனை வாங்கியுள்ளார். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தனது வாழ்வை, உயிரை காப்பாற்றிய விநாயகர் நினைவாக இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களை ஆசீர்வதிக்க யானை வாங்கும் திட்டத்தையும் வைத்துள்ளார். இவரது மனவலிமை வியக்கத்தக்கது.
    Next Story
    ×