search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்
    X
    திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்

    திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்

    108 வைணவ திவ்ய தேசங்களில் 79-வது ஸ்தலமாக திகழ்கிறது நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில்.
    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 79-வது ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். நெல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது.

    ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார்.

    நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார்.

    ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம ராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம ராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.திருக்குறுங்குடி நம்பியை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    தனிச்சிறப்பு

    இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் முக்தியடைந்துள்ளார். ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

    ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரி களிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..

    இந்த கோவிலில் தினசரி விஸ்வரூபம், காலசந்தி, உச்சி கால பூஜை. சாயரட்சை, அத்தாழம், அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. அன்றைய தினங்களில் காலை, மதியம் 2 நேரங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும், பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞசனமும், இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும்.

    புரட்டாசி மாத பூஜைகள்


    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருமலை நம்பிக்கு சிறப்பு பூஜைகள், வெகு விமரிசையாக நடைபெறும்.
    ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு நித்திய பூஜைகள் நடைபெறும். நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை பால், எண்ணெய் உள்ளிட்டவைகளை கொண்டு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அன்றைய தினங்களில் பெருமாளை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அன்று மட்டும் பகல் 2.15 மணி முதல் 6 மணி வரை பக்தர்களுக்காக சிறப்பு துப பூஜை, தீப பூஜை, குட பூஜை, கற்பூர ஆராத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    பெருமாளுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல், நைவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும். தொடர்ந்து கட்டளைதாரர்களுக்கு சிறப்பு மரியாதை செய்தல் நடைபெறும். மாலை 6 மணிக்கு திருமலை நம்பிக்கு சாயரட்சை பூஜைகள் நடைபெறும்.
    Next Story
    ×