search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மல்லிகா சுந்தர், பிரகதீஸ்வரர் பிரகந்நாயகி, ஆலய ராஜகோபுரம்
    X
    மல்லிகா சுந்தர், பிரகதீஸ்வரர் பிரகந்நாயகி, ஆலய ராஜகோபுரம்

    பகை விலக்கும் பிரகதீஸ்வரர் கோவில்

    சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. பழமையின் நினைவுச் சின்னமாகத் திகழும் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை கடந்ததும், விசாலமான மண்டபம் உள்ளது. அதைத் தாண்டியதும் அழகிய மகாமண்டபம்.

    இதன் மேல் திசையில் உள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும், கருவறையில் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கும் பிரகதீஸ்வரரை வழிபடலாம். இந்த லிங்கம் பவள லிங்கமாக காட்சி தருகிறது. மகாமண்டபத்தின் எதிரே இறைவி பிரகந்நாயகி நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னையின் மேல் இருகரங்களில் அங்குசமும் பாசமும் இருக்க, கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரைகளைக் காட்டி பக்தர்களை கவர்ந்திருக்கிறார் இந்த அன்னை.

    ஆலயத்தின் திருச்சுற்றில் மேற்குப் பகுதியில் விநாயகர் அருளாசி வழங்குகிறார். இவரது சன்னிதியை அடுத்து, முருகப்பெருமான் சன்னிதி இருக்கிறது. வள்ளி- தெய்வானை சமேதராக ஆறுமுகத்தோடும், பன்னிரு கரங்களோடும் மயில் வாகனத்தில் அமர்ந்தபடி அருளும் இந்த முருகப்பெருமானைக் காண கண்கோடி வேண்டும்.

    திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்புரிகின்றனர். இங்கு நவக்கிரகங்களின் அமைப்பு வித்தியாசமாக உள்ளது. தனது துணைவியுடன் நடுநாயகமாக சூரியன் வீற்றிருக்க, பிற கிரக நாயகர்கள் சூரியனை பார்த்தபடி அருள்பாலிப்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. பொதுவாக சூரியன் மற்றும் பைரவர் திருமேனிகள் ஆலயத்தின் கிழக்கு பிரகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ராஜகோபுரத்தின் உட்புறம் அழகான மாடத்தில் வலதுபுறம் பைரவரும், இடது புறம் சூரியனும் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயம் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திர தினத்தில் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.

    நாம் வணங்கும் போது பவளமாய் பளிச்சிட்டு நமக்கு அருள்புரியும் இத்தல இறைவன், நம் வாழ்க்கையிலும் பளீரென ஒளி விளக்கேற்றி பகை விலக்கி நம்மை நிறைவோடும், வளமோடும் வாழ வைப்பார் என பக்தர்கள் நம்புவது உண்மையே.

    தினமும் இரண்டு கால ஆராதனைகள் நடைபெறும் இந்த ஆலயமும், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருச்சி- அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருவளநல்லூர் திருத்தலம்.
    Next Story
    ×