search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெத்தம்மா திருக்கோவில்
    X
    பெத்தம்மா திருக்கோவில்

    தித்திக்கும் வாழ்வு அருளும் தெலுங்கானா காவல் தெய்வம் பெத்தம்மா திருக்கோவில்

    தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் என்ற சிறப்பை கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்திருக்கக் கூடிய பெத்தம்மா திருக்கோவில்.
    தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம், ஐதராபாத் நகரின் புகழ்பெற்ற திருக்கோவில், துர்க்கையின் அம்சமாகத் தோன்றிய அன்னை, அம்பாளின் கருணைக்காகவே திருவிழா எடுக்கப்படும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்திருக்கக் கூடிய பெத்தம்மா திருக்கோவில்.

    ‘பெத்தம்மா’ என்பதற்கு ‘பெரிய அம்மன்’ என்று பொருள். இந்தத் திருக்கோவிலானது, ஐதராபாத் நகரிலேயே மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. சுமார் 200 ஆண்டு களுக்கு முற்பட்டதாக, இந்த துர்க்கை அம்மன் ஆலயம் கருதப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு, பழமை வாய்ந்ததாக இருந்த இந்த ஆலயம் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, புத்துணர்வு பெற்று நிற்கிறது.

    இந்தக் கோவில் தோன்றியதற்கு பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் தற்போது தல வரலாறாக இருக்கும் கதையை நாம் பார்ப்போம்.

    தேவர்களுக்கும், முனிவர் களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்த ஒரு அசுரனுடன் துர்க்கை தேவி போரிட்டாள். அந்த அசுரனை வதம் செய்தபிறகு, அந்த களைப்பு நீங்க அவளுக்கு தண்ணீர் தேவைப்பட்டது. இதையடுத்து இந்தத் திருத்தலம் அமைந்த இடத்தில் இருந்த ஒரு கிணற்றின் நீரை அருந்தி, துர்க்கை அம்மன் தாகம் தணித்துக் கொண்டாள்.

    அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், துர்க்கை அம்மனைக் கண்டான். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அன்னையின் திருவுருவம் மறைந்தது. தனக்கு தெய்வத்தின் அருள்காட்சி கிடைத்ததை நினைத்து மனம் மகிழ்ந்தார். மேலும் அன்னை காட்சி தந்த இடத்திலேயே ஒரு சிலை இருப்பதையும் கண்டார். அந்த சிலை இருந்த இடத்தை மையமாக வைத்து உருவானதே, தற்போது இருக்கும் ‘பெத்தம்மா ஆலயம்’ என்பது தலவரலாறு.

    இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 1993-ம் ஆண்டு கட்டப்பட்டது. இருப்பினும் அன்னை பெத்தம்மாவின் அளப்பரிய சக்தியின் காரணமாக, இந்த ஆலயம் ஐதராபாத் மக்களின் மனம் கவர்ந்த திருக்கோவிலாக திகழ்ந்து வருகிறது.

    ஆலய அமைப்பு :

    சாலையோரத்தில் பிரமாண்ட வளைவு நம்மை வரவேற்கிறது. அதைக் கடந்து சென்றால் ஆலயத்தின் 7 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. ராஜகோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால், கொடிமரம் காட்சி தருகிறது. அதை வணங்கிச் சென்றால், மகா மண்டபம் வண்ண சிற்பங்களால் மிளிர்வதைக் காணலாம். மகா மண்டபத்திற்கு நேர் எதிரில் கருவறை முன்மண்டபம் உள்ளது. கருவறையில் அன்னை பெத்தம்மா, அமர்ந்த நிலையில் எழிலாக காட்சி அருள்கிறாள். ஒளிவீசும் முகத்தில் புன்னகை தவழ, நான்கு கரத்தைக் கொண்டவளாக, சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்தபடி கம்பீரமாக அன்னை பெத்தம்மா காட்சிதருகிறாள். நான்கு கரங்களில் வலது மேல் கரத்தில் சக்கரமும், இடது மேல் கரத்தில் சங்கும், வலது கீழ் கரத்தில் வாளும், இடது கீழ் கரத்தில் சூலம் மற்றும் குங்குமக் கிண்ணமும் தாங்கி அன்னை அருளாசி வழங்குகிறாள்.

    கோவிலின் வலது சுற்றில் கணபதி மற்றும் நவசக்தி தேவி களின் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. கோவில் வளாகத்தின் வெளியே தனி கட்டிடத்தின் மாடியில் லட்சுமி, சரஸ்வதி தேவி சன்னிதிகளும், அதைத் தொடர்ந்து தரைப்பகுதியில் நாகங்களின் திருமேனிகளும் காணப்படுகின்றன. அதற்கடுத்தாற் போல் தியான மண்டபம், அன்னதானக் கூடம் போன்றவை அமைந்துள்ளன.

    இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் மகோற்சவம் மற்றும் ரத உற்சவம் போன்றவை சிறப்பாக நடைபெறு கின்றன. இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் செல்கிறாா்கள். இது தவிர அம்மனுக்குரிய அன்னை வழிபாடுகளும், இந்த ஆலயத்தில் சிறப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயமானது, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமையில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ச்சியாக தரிசனம் செய்ய முடியும்.

    காசு வைத்து வேண்டுதல் :

    ஆலயத்தின் கொடிமரத்து அடியில் உள்ள தரையில், பக்தர்கள் காசு வைத்து விநோதமான வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். அதாவது, ஒரு நாணயத்தை நிற்க வைத்து, தங்களது வேண்டுதலை அம்மனிடம் சொல்லி முறையிடுகிறார்கள். அப்படி பக்தர்கள் தங்கள் வேண்டுதலைச் சொல்லி வழிபட்டு முடிக்கும் வரை, அந்த நாணயம் கீழே விழாமல் இருந்தால், வேண்டுதல் மிக விரைவிலேயே நடைபெற்றுவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    போனாலு பண்டிகை :

    தெலுங்கு ஆஷாட மாதத்தில் (ஜூலை மற்றும் ஆகஸ்டு), தெலுங்கானா முழுவதும் மகா காளிக்காக மிகப் பெரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. கி.பி. 1813-ம் ஆண்டு ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் பிளேக் நோய் பாதிப்பு இருந்தது. அப்போது அந்த நோய் நீங்க, அங்குள்ள மக்கள் அனைவரும் உஜ்ஜயினி மகா காளியை பிரார்த்தித்தனர். இதையடுத்து நோயின் தாக்கம் குறையத் தொடங்கியதாம். இதனால் இரு நகரங்களின் பல பகுதிகளிலும் மகா காளிக்கு ஆலயம் எழுப்பி, நன்றிக் கடன் செலுத்து விழா ஒன்றை எடுத்தனர். இந்த விழாவைத் தான் ‘போனாலு பண்டிகை’ என்கின்றனர்.

    அமைவிடம் :

    தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் நகரில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஹைசிட்டி சாலையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மகாத்மா காந்தி பஸ் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    -பனையபுரம் அதியமான்
    Next Story
    ×